பக்கம்:பாரதித் தமிழ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

37



இந்தியாவின் ஆசிரியராகப் பாரதியார் இருந்தபோதிலும் அவருடைய பெயர் அதிலே ஆசிரியரெனக் குறிப்பிடப்படவில்லையல்லவா?

ஆதலால் ஸ்ரீநிவாசனையே போலீசார் கைது செய்தார்கள். பின்னால் பாரதியாருக்கும் பத்திரிகையின் சொந்தக்காரருக்கும் இதே கதி நேரும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. அவர்களும் அதை உணர்ந்து கொண்டார்கள்.

பாரதியார் ரகசியமாகப் புதுச்சேரி போய்ச் சேர்ந்தார். அவர் அங்கு சேர்ந்த ஒரு மாதத்திற்குள் மண்டையம் சீனிவாசாசாரியாரும் அங்கே வ்ந்து சேர்ந்துவிட்டார்.

ஸ்ரீநிவாசனுக்கு ஐந்தாண்டு தீபாந்திர சிட்சை விதிக்கப்பட்டது. இது நியாயமல்ல வென்று 16-11-1908-ல் சுதேசமித்திரன் துணையங்கம் எழுதியுள்ளது.

இந்தியாவின் வீர முழக்கம் 1908-ஆம் ஆண்டு செப்டம்பர் இறுதி வாரம் வரை சென்னையில் ஒலித்தது.

பாரதியார் புதுச்சேரிக்குச் செல்லத் தீர்மானித்ததைப் பற்றிச் சிந்திக்கும்போது அந்தச் சமயத்தில் நாட்டில் ஏற்பட்ட சில முக்கிய நிகழ்ச்சிகளையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதே ஆண்டிலே ஜூலை மாதம் 13-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு ஐந்து நாள் விசாரணைக்குப் பின் திலகருக்கு ஆறாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பாரதியார் தமது தலைவராகக் கொண்ட பெரியார் மாண்டலேக்குக் கொண்டு போகப்பட்டார். தமிழ் நாட்டிலே பெரிய தேசீய வீரராக விளங்கிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை அதே ஆண்டு மார்ச்சு மாதம் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/37&oldid=1539891" இலிருந்து மீள்விக்கப்பட்டது