பக்கம்:பாரதித் தமிழ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

பாரதி தமிழ்


சென்னைக்கு மீண்டும் வந்த பாரதியார் அந்த உடலோடு தாம் அதிக நாட்கள் உலகத்திலே இருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டார் போலும். அதுவே மரணத்தைப்பற்றிய நினைவிலே அவரை அடிக்கடி இழுத்துச் சென்றிருக்கிறது.

காலால், உன்னை நான் சிறு புல்லென மிதிக்கிறேன்: என்றன் காலருகே வாடா ! சற்றே உன்னை மதிக்கிறேன்

என்று தொடங்கும் பாடலை அவர் 1919 டிசம்பர் இறுதியில் வெளியான சுதேசமித்திரன் ஆன்டு அநுபந்த மலரில் எழுதியிருக்கிறார்.1921 ஜூலை மாதம் இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதலிரண்டு தேதிகளிலோ பாரதியார் ஈரோட்டிற்குச்சென்றிருக்கிறார். அங்கே கருங்கல் பாளையம் என்ற ஊரிலுள்ள வாசகசாலையில் பேசியதைப்பற்றி எழுதும்போதும். “எனக்கு ஒரு விஷயந்தான் முக்கியமாகத் தெரியும். அதையே அங்கும் எடுத்துப் பேசினேன். அதாவது இந்த உலகத்தில் மானுடர் எக்காலத்திலும் மரணமில்லாமல் இருக்கக்கூடுமென்ற விஷயம்” என்று கூறுகிறார். அடுத்த செப்ம்பர் 11லேயே அவருடைய உடம்பு வீழ்ந்து விடுகிறது.

ஆனால் மரணமில்லாமல் வாழலாம் என்று பாரதியார் கூறியது அவரைப் பொறுத்த அளவிலே பொய்யாகவில்லை. அவருடைய பூதவுடல் அதன் இயல்புக்கு ஏற்றவாறு நலிந்து மறைந்துவிட்டாலும் பாரதியார் சாகவில்லை அவருடைய எழுத்துக்களின் மூலம் அவர் சிரஞ்சீவியாக இருக்கிறார். தேடிச் சோறு நிதம் தின்று. பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, நரை கூடிக் கிழப் பருவமெய்தி, கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதரைப் போல அவர் வீழ்ந்துவிடவில்லை. அவருடைய தமிழின் மூலம் அவர் அமரர் ஆனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/70&oldid=1539872" இலிருந்து மீள்விக்கப்பட்டது