பக்கம்:பாரதித் தமிழ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியாரின் பத்திரிகைத் தொண்டு

73


சிறு பதங்களுடன் கூடிய ஒரு நவீன கம்பீரநடை. இந்தியா பத்திரிகை சனிக்கிழமை தோறும் வெளியாகிவந்தது. நாலாயிரம் பிரதிகள் வரை போய்க்கொண்டிருந்தது. ஒவ்வொரு பத்திரிகையிலும் அவ்வார வர்த்தமானத்தின் சார்பாய் ஒரு பெரிய சித்திரம் கண்ணுக்கினிய காட்சியாய் மிக்க அழகுடன் பிரசுரிக்கப்பட்டு வந்தது. அந்தப் படம் இன்னின்னவாறு இருக்க வேண்டுமென்று சித்ரீகருக்குப் பாரதியார் சொல்லுங்காலையில் அப்படத்தின் அம்சங்களையெல்லாம் தமது முகத்திலும் அபிநயங்களிலும் காண்பித்துவிடுவார். சித்ரீகரின் மனதில் அந்தப் பாவனைகள் நன்கு பதிந்துவிடும். அவ்விதமே சித்திரமும் தயாராகும்.

“இந்தியா பத்திரிகை பிரபலப்பட்டபொழுது அது மிகவும் உக்கிர வாசகமுள்ளதாயிருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்சம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும் படியானரீதியில் சாந்தமாய் சட்டவரம்புக்கு உட் பட்டு நடக்கும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரின் எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயமென்று பலர் கூறினர். ஒரு சமயம் பாரதியார் டிராம் வண்டியில் செல்லுகையில் இந்தியா பத்திரிகையைப் படித்த ஒரு உத்தியோகஸ்தர் மிக்க கோபாவேசமாய் இப்பத்திரிகையின் ஆசிரியரை அவசியம் தண்டிக்க வேண்டுமென்று பாரதியாரிடம் கூறினர். பாரதியார். “அப்படியா?” என்றார். இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியா பத்திரிகை தனக்கென்று ஒரு புதுக்காரியாலயமும் அச்சுக் கூடமும் அமைத்துக்கொண்டு வேருய்விட்டது. பத்திரிகையே வேறுகை மாறினும் அதன் கொள்கை எப்போதும்போல் இருக்கும் என்று ஒரு தனிக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/73&oldid=1539800" இலிருந்து மீள்விக்கப்பட்டது