பக்கம்:பாரதித் தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

1928-ஆம் ஆண்டு நான் சென்னையிலுள்ள மாகாணக் கல்லூரியில் இண்டர்மீடியட் முதல் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதே எனக்குப் பாரதிப் பைத்தியம் என்ற சிறப்புப் பெயர் உண்டு.

இந்தப் பைத்தியம் எனக்கு ஒரு துணிச்சலைக்கொடுத்தது. ஒரு நாள் தன்னந்தனியாகச் சுதேசமித்திரன் பத்திரிகாலயத்திற்குச் சென்று அதன் ஆசிரியரான திரு.சி.ஆர். சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் நின்றேன். “சுப்பிரமணிய பாரதியார் சுதேசமித்திரனில் எழுதத் தொடங்கியதிலிருந்து அதாவது 1905-ஆம் ஆண்டு முதல் 1921-ஆம் ஆண்டு முடிய உள்ள பழைய சுதேசமித்திரன் பத்திரிகையின் தொகுதிகளைப் பார்வையிட ஆர்வத்தோடு வந்திருக்கிறேன். பாரதியார் எழுதியவற்றை ஒன்றுவிடாமல் சேகரம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை” என்று கூறினேன்.

என்னை யாரென்று அவருக்குத் தெரியாது. அறிமுகக் கடிதம் ஒன்றும் என்னிடமிருக்கவில்லை. அவர் என்னிடத்திலே என்ன கண்டாரோ எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி அதிகம் விசாரித்து அறிந்து கொள்ளக்கூட அவர் உத்தேசம் செய்யவில்லை. உடனே எனது விருப்பத்திற்கு அன்போடு சம்மதம் தெரிவித்தார். பழைய தொகுதிகள் நிறைந்து கிடக்கும் அந்த அறைக்குள்ளேயே இருந்து வேண்டியவற்றை நகல் எடுத்துக் கொள்ளலாம்: தொகுதிகளை மட்டும் வெளியில் எடுத்துச் செல்லக் கூடாது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்தவிதமான நிபந்தனையும் இல்லை. என் விருப்பம்போலச் செல்லலாம்; திரும்பி வரலாம்.

இன்றைக்கு நினைத்தாலும்கூட எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னிடத்திலே திரு.சி.ஆர். சீனிவாசன் அவர்களுக்கு அன்று எப்படி அவ்வளவு நம்பிக்கை பிறந்ததோ தெரியவில்லை. “என்னவோ சிறு வயசுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/8&oldid=1540049" இலிருந்து மீள்விக்கப்பட்டது