உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

படிப்புச் சொல்லிக் கொடுப்பதை நினைக்கும்போது, கொஞ்சம் சிரிப்புண்டாகிறது. அன்மொழித் தொகை சிலரைக் காப்பாற்றும்; ஊர் முழுதையும் காப்பாற்றாது. நெல்லுத்தான் ஊர் முழுதையும் காப்பாற்றும். அன்மொழித் தொகையைத் தள்ளிவிட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அன்மொழித் தொகையைப் பயிர் செய்து நெல்லை மறந்துவிடுவது சரியான படிப்பில்லை யென்று சொல்லுகிறேன். அவ்வளவுதான்.

(கிச்சடி என்ற கட்டுரையிலிருந்து)

பாரதியாரும் தமிழும் மாதரும்

எதிலும் நகைச்சுவையைக் காண்பவர் பாரதியார். இது பழித்து அறிவுறுத்தலாக இருக்கும்; எள்ளித் திருத்துதலாக இருக்கும். பொதுவாக இவர் மனம் புண்படும்படி நகைச்சுவையைக் கையாளமாட்டார். ஆனால் இந்தப் பொதுவிதிக்கு இரண்டு விதிவிலக்குகள் உண்டு. முன்னே குறிப்பிட்டபடி தாய்மொழியாகி தமிழைக் குறைவாகப் பேசிவிட்டால் அவருக்கு அடங்காத கோபம் வந்துவிடும். வலிமை வாய்ந்த சொற்களால் கேலியும் கிண்டலும் வஞ்சப் புகழ்ச்சியும் இடிமுழக்கமாகக் கொட்டித் தீர்த்து விடுவார். இதற்கு எடுத்துக் காட்டாகத் தமிழ் என்ற கட்டுரை அமைந்துள்ளது. பெண்களை இழிவுபடுத்தினாலும் அடங்காத கோபம் வந்து விடும். பாஞ்சாலி சபதத்திலே துச்சாதனன் பாஞ்சாலியைக் கூந்தலைப் பற்றியிழுத்துக்கொண்டு போகும்போது இப்படிப்பட்ட கோபம் பாரதியாருக்கு வந்து விடுகின்றது. முதலில் துச்சாதனனது மனப்பண்புகளை விவரிக்கத் தொடங்குகின்றார், அவன் எப்பேர்ப்பட்டவனாம்? பாரதியாரின் வாக்கிலேயே கேளுங்கள்: