உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

அவளுக்கு நோயின்மை, கல்வி, கவலையின்மை, பக்தி, ஞானம் முதலிய சோபனங்களெல்லாம் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

குழந்தையை உனது குழந்தையாகக் கருதி, இவ்வுலகத்தில் நீடித்துப் புகழுடன் வாழும்படி திருவருள் செய்ய வேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.

எனது குடும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சி புரியும் தொழில் என்னைச் சேர்த்தது. தாயே, ஸம்மதந்தானா?

மஹா சக்தீ! என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதையூற்று ஏற்படுத்திக் கொடு.

ஓயாமல் வியாதிபயம் கொண்டு உளைகின்ற நெஞ்சமே! தூ! தூ! கோழை.

புகையிலை வழக்கம் தொலைந்து விட்டது. பராசக்தியின் அருளால். இனிக் ‘கஸரத்’ வழக்கம் ஏற்பட வேணும், பராசக்தியின் அருளால், தோள் விம்மி வயிரம் போலாக வேணும். நெஞ்சு விரிந்து, திரண்டு வலிமையுடையதாக வேணும். இரத்தம் மாசு தீர்ந்து, நோயின்றி நன்றாக ஓடி உடலை நன்கு காத்துக் கொண்டிருக்க வேணும் — பராசக்தியின் அருளால்.

செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய் வாயிதா. பொய் வாயிதா. பொய் வாயிதா—தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ!

பராசக்தி— உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு, நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன், நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக் கொண்டேயிருந்தால்.