உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

10. அச்சமும் பேடிமையும்
        அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ!—கிளியே!
        ஊமைச் சனங்களடீ!

11. ஊக்கமும் உள்வலியும்
        உண்மையிற் பற்றுமில்லா
மாக்களுக்கோர் கணமும்—கிளியே!
        வாழத் தகுதி யுண்டோ?

12. மானம் சிறிதென் றெண்ணி
        வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில்!—கிளியே!
        இருக்க நிலைமை யுண்டோ!

13. சிந்தையிற் கள்விரும்பிச்
        சிவசிவ வென்பது போல்,
வந்தே மாதர மென்பார்!—கிளியே!
        மனதிலதனைக் கொள்ளார்.

14. பழமை பழமை யென்று
        பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை!—கிளியே
        பாமர ரேதறிவார்!

15. நாட்டில் அவ மதிப்பும்
        நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே!—கிளியே!
        சிறுமை யடைவாரடீ!

16. சொந்தச் சகோதரர்கள்
        துன்பத்திற் சாதல் கண்டும்.
சிந்தை இரங்காரடீ!—கிளியே!
        செம்மை மறந்தாரடீ!