24
6. நெஞ்சு பொறுக்கு திலையே – இதை
நினைந்து நினைந்தின்னும் வெறுக்குதிலையே;
கஞ்சி குடிப்பதற் கிலார் – அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்து,
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)
7.எண்ணிலா நோயுடையார் – இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமை யிலார்;
கண்ணில்லாக் குழந்தை கள்போல் – பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள் – பத்து
நாலாயிரங்கோடி நயந்து நின்று.
புண்ணிய நாட்டினிலே இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார். (நெஞ்சு)
பணியாள் இல்லாவிட்டால் வீட்டிலே வேலை ஓடாது. அந்தப் பணியாளோ, பாவம் எத்தனையோ வகைகளில் ஏமாற்றுகிறான். பாரதியார் இதை நன்றாக அனுபவித்திருக்கிறார் - பணியாள் எத்தனை வகைகளில் ஏமாற்றுகிறான் என்பதை நகைச்சுவையோடு கண்ணன் 'என் சேவகன்' என்னும் கவிதையிலே தெரிவிக்கிறார். பணியாளைக் கண்டனம் புரியவில்லை என்பதை இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அந்தப் பணியாளுக்கு என்றுமே பாரதியார் உள்ளத்திலே இரக்கம் உண்டு. தொழிலாளருக்கு உரிய நியாயம் வழங்கவேண்டும் எனப் பரிந்து பேசி ஒரு நீண்ட கட்டுரையே வரைந்திருக்கிறார். அதனால் பணியாளர் பலவித சாக்குப் போக்குச் சொல்லும்போது அவரிடம் கோபம் வருவதில்லை. அதற்கு மாறாக நகைச்சுவை மிகுந்து வெளிவருகின்றது. கவிதையைப் பார்ப்போம்.