உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

சாரஞ் செய்திடாமே பிறறைத் துயரில் வீழ்த் திடாமே.
ஊரை யாளு முறைமை – உலகில் ஓர் புறத்துமில்லை."

பாரதியார் இவ்வாறு நகைச்சுவையையும், நையாண்டியையும், கிண்டல்களையும், எள்ளித்திருத்தல்களையும். வஞ்சப் புகழ்ச்சிகளையும், பழித்து அறிவுறுத்தல்களையும் நிறையப் பெய்து வைத்திருக்கிறார். இவையெல்லாம் இன்றும் என்றும் இன்பம் தரக்கூடியவை; மணி மணியானவை!

ஆனால், பாரதியாருடைய உரைநடைக் கட்டுரைகளிலும், கதைகளிலும் இந்த நகைச்சுவை ஏராளமாகக் காணப்படுகின்றன. எடுத்த எடுப்பிலேயே ஞானரதம் என்ற நூல்தான் நினைவுக்கு வருகின்றது.

ஞானரதம் ஒரு கற்பனைக் களஞ்சியம். அதை ஒரு கவிதையாகவே கொள்ளலாம். அவ்வாறு இனிமை வாய்ந்த உரைநடையினைக் கொண்டது ஞானரதம்.

பாரதியார் தமது மனம் என்கிற தேரில் ஏறிக் கொண்டு பல உலகங்களுக்குச் சென்று தமது அறிய அனுபவத்தைத் தெரிவிப்பது ஞானரதம். முதலில் துன்பக்கலப்பற்ற இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப்போய் வருவோம் என்று தமது ஞானரதத்திற்கு ஆணையிடுகிறார். அங்கே பர்வதகுமாரி என்ற ஒரு அழகிய கன்னியைச் சந்திக்கிறதும் எங்குமே இசைமயமாக இருப்பதுமான தமது இன்ப அனுபவங்களை மிக அழகாகக் கவிதை நயத்தோடு தெரிவிக்கின்றார். பிறகு ஸத்ய லோகத்திற்குச் சென்று வருகின்றார்.

கந்தர்வ லோகத்தையும், ஸத்ய லோகத்தையும் வருணித்து விட்டு மண்ணுலகத்தை விட்டுவிடலாமா? பாரதியாருக்கு மண்ணுலகந்தானே முக்கியம்! ஆகவே,