66
பழக்கமுண்டு. கதை கலாக்ஷேபம், உபந்நியாசம் முதலியன நடந்தால், தவறாமல் கேட்கப் போவார். பெரும்பாலும் கதை கேட்டுவிட்டு அதிருப்தியுடனே திரும்பி வருவார். வீட்டுக்கு வந்து உபந்நியாசிகளின் கொள்கைகளை ஒரு மாதம் தொடர்ச்சியாக நண்பர்களுடனே தர்க்கிப்பார். "இந்துக்கள் முற்காலத்தில் நல்ல மேதாவிகளாக இருந்தனர். இன்னும் அதிசீக்கிரத்தில் மேலான நிலைமைக்கு வரப்போகிறார்கள். ஆனால், இந்தத் தேதியில், பண்டிதர்களாக வெளிப்பட்டு பிரசங்கங்களும், கதைகளும் கலாக்ஷேபங்களும் நடத்தும் இந்துக்களிலே நூற்றுக்குத் தொண்ணூறுபேர் சமையல் வேலைக்குப் போகவேண்டியவர்கள். அதை விட்டு, உலகத்துக்கு ஞானோபதேசம் பண்ணக் கிளம்பி விட்டார்கள். இது பெரிய தொல்லை, உபத்திரவம், தொந்தரவு, கஷ்டம், சங்கடம், ஹிம்சை, தலைநோவு. இந்தத் தேதியில், இந்து ஜாதி முழு மூடமாக இருக்கிறது. நம்மவர்கள் மூளைக்குள்ளே கரையான் பிடித்திருக்கிறது. எனக்கு இந்துக்களின் புத்தி நினைக்கும்போது வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. பட்டாகோனியா தேசத்தில் கூட சராசரி நூற்றுக்கு இத்தனை பேர் மூடர்களாக இருப்பார்களென்று தோன்றவில்லை" என்று நானாவிதமாக நம் தேசத்தாரின் அறிவு நிலைமையைத் தூஷணம் செய்து கொண்டேயிருப்பார்.
மேற்படி பிரமராஜ வாத்தியாருக்குத் தமிழிலும் கொஞ்சம் ஞானமுண்டு. ஐரோப்பியரின் சாஸ்திரங்களில் பலவற்றைத் தமிழில் எழுதியிருக்கிறார். சில சமயங்களில் கவிதைகூட எழுதுவார். இவருடைய கவிதை மிகவும் உயர்ந்ததுமில்லை, தாழ்ந்ததுமில்லை; நடுத்தரமானது. இவருக்கு சங்கீதத்தில் நல்ல ஞானமுண்டு. ஆனால் பாடத் தெரியாது. தொண்டை சரிப்படாது. தாளத்தில் மஹ-