12
பாரதியார் கதைகள்
ஆனால் அங்கு போவதில் எனக்குப் பிரியமில்லை“ என்று மனம் கூறிற்று.
நான் கோபத்துடன், “சீச்சீ! பேதை மனமே, உனக்கு ஓயாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளையும் உளைச்சல்களையும் கண்டு இரங்கி, நான் உன்னைச் சிறிது நேரமேனும் அமைதி யுலகத்திற்குக் கொண்டுபோய் வைத்துத் திரும்பலாம் என்று உத்தேசித்தேன். இதற்கு நீயே ஆக்ஷேபம் சொல்ல வருகிறாயா?” என்று கண்டித்தேன். மனம் பிணங்குதல் மாறாமல் மறுபடியும் எதிர்த்து நின்றது.
எனக்கு இந்த மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிக முண்டு. ஆதியில் எவ்வாறு இந்த மோகம் உண்டாயிற்று என்பதை இங்கே விஸ்தரிக்க முடியாது. அது ரகஸ்யம். ஆனால், நாளேற நாளேற நான் வேறு இந்த மனம் வேறு என்ற த்வைத சிந்தனையே பெரும்பாலும் மறந்து போகும் வண்ணமாக எனக்கு இம் மோகினியிடத்தில் பிரேமை மிகுந்து போய்விட்டது. இந்த மனம் படும் பாடுகளைக் கண்டு பொறுக்காமலேதான் நான் சாந்தி லோக தரிசனத்திலே விருப்பம் கொண்டேன். இப்போது மனம் அந்த யோசனையில் நிஷ்காரணமாக வெறுப்புக் கொள்வதைக் கண்டு எனக்குத் திகைப்பும், இரக்கமும், கோபமும் கலந்து பிறந்தன. எவ்வளவோ விதங்களில் மனத்தைச் சமாதானம் செய்ய முயன்றேன். மனம் பின்னும் கண்ணை மூடிக்கொண்டு ஒரேடியாக மூடச் சாதனை சாதிக்கத் தொடங்கிற்று. எனக்கு இன்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, ஒரே நிச்சயத்துடன், “மனமே. நான் இந்த விஷயத்தில் உன் பேச்சைக் கேட்கவே மாட்டேன். உன்னுடைய நன்மையைக் கருதியே நான் செய்கிறேன்.—ஞானரதமே,—உடனே புறப்படு” என்றேன்.
அடுத்த நிமிஷத்தில் உபசாந்தி பூமிக்கு வந்து சேர்ந்தோம்.