பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


தமிழகத்து இறவா இலக்கியங்களை ஈன்றோருள் பலர் கால எல்லைக்குள் அகப்படாதவர். பலர் அகப்படுவார் போல் வேடிக்கை காட்டுபவர். பலர் கால எல்லையில் நின்று பேசுபவர். யாவராயினும் அவரவர்க்குப் பின்னர் தோன்றிய படைப்பாளர்கள், முந்தையோர் எவர்க்கேனும் ஒரு திறவுகோலராக விளங்கினர்.

மணிமேகலையில் ஆபுத்திரனைப் படைத்த தண்டமிழ் ஆசான் சாத்தனார் திருவள்ளுவப் பெருமானுக்கு ஒரு திறவுகோலர். இவரேபோல் வள்ளுவப் பெருந்தகையார்க்குப் பின் வந்தோர் எல்லாரும் அத்தமிழ்த் தந்தைக்கு ஒவ்வொரு வகையான திறவுகோலராக முந்திக் கொண்டனர்.

சங்க இலக்கிய அகத்துறைப் புலவர்களுக்கு முத்தொள்ளாயிர ஆசிரியர் ஒரு திறவுகோலர். தேவார மூவர்க்கு ஒரு சேக்கிழார். வாதவூர் அடிகளுக்கு ஒரு வடலூர் வள்ளலார். கம்பர்க்கும், கச்சியப்பர்க்கும் கரையிலாப் புலமையேறுமீனாட்சிசுந்தரனார். கவிமாமன்னர்பாரதியார்க்கு ஒரு பாவேந்தர் பாரதிதாசனார். சுருக்கங் கருதி இவ்வளவில் நிறுத்தலாம். ஆயின், உண்மைப் பட்டியல் பல்கிப் பெருகும்.

இவ்வகையே, கவிமன்னர் பாரதியாரைக் கூர்ந்து நோக்கினால் அவரும் ஒரு தேர்ந்த இலக்கியத் திறவு கோலராய் மிளிர்கிறார்.

பாரதியாரின் தமிழ்ப்பற்றும், இலக்கியப் பேரார்வமும் ஓர்ந்து கண்டு மகிழத்தக்கவை. அவர் தமக்குக் கிட்டிய தமிழ் இலக்கியங்களை ஆர்வ உள்ளத்தோடு அணுகினர்:

5