பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


முரசியம்பின [1] முருடதிர்ந்தன
முறையெழுந்தன. [2] பணிலம்”

என்ற இசைக் கருவிகனை இயங்க வைத்து மங்கல இசையோடு தம் இசையுணர்வைத் துவங்கினார். அரங்கேற்று காதையில் இசையாசிரியன் வழி, வாய்ப்பாட்டை இசைத்தார். தண்ணுமையோன் வழி, மத்தளத்தை இசைத்தார். குழலாசிரியரின் வழி, குழலை இசைத்தார். யாழாசிரியன் வழி, யாழை இசைத்தார்.

கானல்வரிப் பகுதியில் கோவலன், மாதவி கைகள் வழியே யாழை இசைத்தார். யாழோடு அவர்கள் குரலிசையால் பல வகைப் பண்களையும் இசைத்தார். அவ்விசையால் கதைத் திருப்பத்தையேஅமைத்தார். வேனிற்காதையில் கோவலனைப் பிரிந்து கலங்கும் மாதவியைப் யாழொடு மயங்கிப் பாட வைத்து இசைத்தார். இதன் மூலம் கலைஞரது துன்பத்திற்கு அவரது கலையே போக்கு வீடாகும் என்பதன் குறிப்பையும் வைத்தார்.

வேட்டுவ வரிப் பகுதியில் வேட்டுவர்களைக் கூத்தாடிப் பாடவைத்துச் சந்தப் பாட்டிசைத்தார். புறஞ்சேரியிறுத்த காதையில் கோவலனைப் பாணரோடு கூடி யாழிசைக்கச் செய்து அவ்வழியே பாடற்பாணி இசைத்தார். ஆய்ச்சியர் குரவையில் ஆய்ச்சியரை மாயவனையும், முடிமன்னர் மூவரையும் பரவிப்பாடச் செய்து குரவை இசை இசைத்தார். ஊர்


  1. முருடு - ஒருவகை மத்தளம்.
  2. பணிலம் - சங்கு.

24