பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


இதனை வேனிற்காதையில் கோவலன் வாயிலாக எண் வகை வரிக்கூத்து என அறிவித்தார். வீட்டுக்காரி போலும் வேலைக்காரி போலும் மாறுவேடந்தரித்து ஆடப்படுபவை வரிக்கூத்து எனப்படும்.

நாட்டிலும், வீட்டிலும் கூத்தைக் காட்டியவர் அடுத்துக் காட்டில் அமைத்துக் காட்டியுள்ளார். வேட்டுவ வரியில் வேடுவர்களைக் குழும வைத்து ஆடவைத்துள்ளார். இதனைக் குமுகாயக் கூத்து எனலாம்.

ஊர்காண் காதையுள் பல்வகைக் கூத்தியரை அறிமுகம் செய்துள்ளார்.

குமுகாயக் கூத்தைக் காட்டியவர் கைகோத்துக் கூடியாடும் குரவைக் கூத்தை ஆய்ச்சியர் குரவையுள் காட்டியுள்ளார்.

இவ்வாறு பல்வகையாய்த் தமிழினத்தார் ஆடும் கூத்துகளைக் காட்டியவர் கால்கோட் காதையுள் பிற இனத்தவர் கூத்தை அமைத்துக் காட்டியுள்ளார். சேர மன்னன் முன்னர்க் கொங்கணரும் குடகரும் ஓவரும் தனித்தனியே தத்தம். கூத்துக் கலைத்திறனைக் காட்டவைத்துள்ளார்.

இறுதியாக, நடுகற் காதையுள் மிகத்திறன் வாய்ந்த, ‘கொட்டிச்சேதம்’என்னும் கூத்தைக்காட்டியுள்ளார்.பறையூர்க் கூத்தச் சாக்கையன் என்பானைச் சேரன் செங்குட்டுவன் முன்னர் அம்மையப்பர் வடிவில் ஆடவைத்துள்ளார். உடலின் வலப் பக்கம் சிவனுருவாம் ஆணுருவும், இடப்பக்கம் உமையுருவாம் பெண்ணுருவும் கொண்டு ஆடப்படுவது இது. ஆண் உருவத்தை இயக்கி ஆடுங்கால் பெண்ணுருவப்பகுதி உறுப்புகளும் அணிகளும் அசைவின்றி அமைதியுற்றிருக்கும்.

27