பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


உருவாக்கியதும், முன்னறிவுப்புகளாகக் கனவுச் செய்திகளை அறிவித்திருப்பதும், பல்லோர் வாயாலும் கதைத்தலைவி தலைவனைப் பாராட்ட வைத்திருப்பதும், விற்பனைக்கு ஒரு சிலம்பைக்கொண்டு செல்ல வைத்ததும், வழக்குரை காதை என ஒருகாதையை அமைத்ததும், செங்குட்டுவனுக்குச் சாத்தனார் கண்ணகியின் மதுரை நிகழ்ச்சிகளை உணர்த்து மாறு அமைத்ததும், இவைபோன்ற பல வகை அமைப்புகளும் சிறந்த நாடக உத்திகள் எனலாம்.

யாவற்றினும் மேலாக ஆங்காங்கு நாடகக் காட்சிகளாகப் பலபகுதிகள் அமைந்துள்ளன. அவை படிப்போர் மனக்கண் முன் நிழற்படங்களாகக் காட்சியளித்து உள்ளத்தை இழுக்கின்றன. பாரதியார் அவற்றைக் கண்டுள்ளார். அவரோடு சிலவற்றைக் காணலாம்.

முதற்காட்சியாகத் தோன்றுவது திருமணக்காட்சி. ஒரு பூப்பந்தல். அதில் முத்துக்கோவைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. மேலே நீல விதானம். ஏதிரே, தீ, சுள்ளிகளிடையே நாவை நீட்டுகிறது. முதிய பார்ப்பனர் மறை, ஓதுகிறார். கண்ணகியைக் கோவலன் கைப்பிடித்துத் தீயை வலம் வருகிறான். மங்கலப் பொருள்களை ஏந்திய மகளிர் ஒருபுறம் நிற்கின்றனர். குமரிகள் கூட்டம் நிற்கிறது. ஒருத்தி நெளிந்து பார்க்கிறாள். ஒருத்தி ஓரக்கண்ணால் பார்க்கிறாள். ஒருத்தி ஏதோ நினைவில் புன்முறுவல் பூக்கிறாள். ஒருத்தி ஏதோ கூறி நகைக்கிறாள். ஒருத்தி பாடுகிறாள். யாவரும் சேர்ந்துகை நிறைய மலர்கொண்டு தூவி வாழ்த்துகின்றனர். இம்மங்கலக் காட்சி மனத்தைக் குளிர்விக்கிறது. இதனைக் ‘காண்பாரது கண் என்ன நோன்பிருந்ததோ’ என இளங்கோவடிகளே குறிக்கிறார்.

29