பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


நாமும் நம்மை மறந்து கைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து விடுகிறோம். அவ்வாறு, இந்நாட்டியக் காட்சி உணர்வில் களிப்பை மீட்டுகிறது. பாரதியாரும் காண்கிறார்; நெஞ்சம் தெள்ளுகிறார்.

அடுத்து ஓர் இயற்கைக் காட்சி: மாலைப்பொழுது. செங்கதிரோன் தான் பரப்பிய செவ்வொளியை இழுத்துக் கொண்டிருக்கிறான். நிலமகள் அவன் பிரிவால் அந்தி மயக்கில் கிடக்கிறாள். கீழ் வானில் திங்கள் தலை நீட்ட முயல்கின்றான். அதோ, குழலில் வாய்வைத்து இடையர் முல்லைப் பண்ணை ஊதுகின்றனர். இதோ, அதைக் கண்ட தும்பி முல்லையில் வாய்வைத்து ஊதுகிறது. இடையே வண்டு மலரின் முடிச்சவிழ்க்கக் கவிழ்ந்து பார்க்கிறது. ஊடே தென்றல் வந்து மலரை அசைத்து அதனை விரட்டுகிறது. செம்மலர் தேனைச் சிந்துகிறது. இது கதிரவனாம் கணவனைப் பிரிந்ததால் நிலமகள் கண்ணீர் விடுவது போல் உள்ளது. ஒரு மூலையில் காதலனைப் பிரிந்தவள் கன்னத்தில் கைவைத்துக் குமைந்துபோயிருக்கிறாள். மறுபுறம் கூடிய இருவர் கைகோத்துக் கும்மளிக்கின்றனர். அதோ பிறைத் திங்கள் தோன்றிவிட்டது. நம் உள்ளத்திலும் ஒரு புன்முறுவல் தோன்றுகிறது. பாரதியும் இக்காட்சியைக் கண்டு புன்முறுவல் பூக்கிறார்: நெஞ்சம் துளும்புகிறார்.

மற்றோர் அவலக் காட்சி: அந்தி நேரம். இருள் ஒளியை விழுங்கத் துவங்கியுள்ளது. ஊருக்கு வெளி இடம்; கொலைக்களம். புழுதி எழும்பிய தரை காட்சியளிக்கிறது. அங்கங்கு குருதி ஓடி ஊறிக் கிடக்கிறது. கோவலன் உடல் குலைந்து குப்புறக் கிடக்கிறான். அவன் மார்பு புழுதியில் பதிந்துள்ளது. மார்பின் ஊடே வாள் அறுத்த பிளவு விலாப்

31