பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


சுவைகளும் மாறி மாறித் தலை தூக்குகின்றன. உள்ளத்தை உலுக்குகின்றன; குலுக்குகின்றன. மனத்தை மகிழ்விக்கின்றன; நெகிழ்விக்கின்றன. நெஞ்சத்தை நயப்பிக்கின்றன; வியப்பிக்கின்றன. எல்லாக் காட்சிகளும் சேர்ந்து பாரதியின் நெஞ்சை அள்ளுகின்றன. அள்ளிவிட்ட நெஞ்சோடு துள்ளி எழுந்து பாடுகிறார் :

நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு.”
-என்று,

ஏன் சிலப்பதிகாரத்தை நெஞ்சை அள்ளும் என்னும் அடைமொழியால் சிறப்பித்தார்? எது நெஞ்சை அள்ளும்?

இயற்றமிழ் உள்ளத்தைக் தொடும். இசைத்தமிழ் மனத்தை மீட்டும். நாடகத்தமிழ் நெஞ்சை அள்ளும்.

அக்காலத்து நாடகம் கூத்தையே கொண்டது. நாடகம் என்னும் சொல் கூத்தையே குறித்தது. “நாடகம் உருப்பசி நல்காளாகி”“நாடக மகளிர்” என்றெல்லாம் கூத்தாடுவோர் குறிக்கப்பட்டனர்.

கதையினைக் கூத்தால் விளக்கிய நாடகம் படிப் படியாக மாறுதலடைந்தது. கூத்து சிறுகச் சிறுகக் குறைந்தது; கூத்தில்லாமலே முகக்குறிப்பு, கைச் செய்கை, குரலிலே எடுத்தல், படுத்தல், நலிதல் ஆகிய ஒலி மாற்றங்கள் பெருகிப் பெருகி நெருங்கி நாடகம் மாற்ற மடைந்தது.

34