பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


நாடகத்தமிழின் பெருமையைக் கொட்டி முழக்குகிறார். முத்தமிழின் அமைப்பை மூன்று முத்துச் சொற்களால் குறித்துள்ள திறம் நோக்கத்தக்கது.

அம்மூன்று சொற்களும் சிலப்பதிகாரம் என்னும் நூற்பெயரோடு சேர்த்தே “சிலப்பதிகாரச் செய்யுள்”,“சிலம்பை இசைத்தது”. “அள்ளும் சிலப்பதிகாரம்” என அமைத்திருப்பதுமேலும் ஒருகால் எண்ணி மகிழ்தற்குரியது.

இம்மூன்று சொற்களும் சிலப்பதிகார இலக்கியத்திற்கு மூன்று முத்தான் திறவுகோல்களாக அமைந்துள்ளன.

இவற்றிற்கு மேலும், சிலப்பதிகாரத்திற்கு மணியான திறவுகோல் ஒன்றும் பாரதியாரால் வழங்கப்பட்டுள்ளது. அது வியத்தற்குரிய அமைப்பு. அதனைக் காண்பதற்கு முன் ஒரு இடைவெட்டான எண்ணத்திற்கு அமைதி கண்டு விடல் நலமாகும்.

‘பாரதியார் தமிழ் இலக்கியங்களில் இத்துணை ஆர்வ நோக்கோடு ஈடுபாடு கொண்டிருந்தாரோ’ என்றொரு ஐயம் எழலாம். இவ்வையமே இடைவெட்டான எண்ணமாகும்,

அவரது கவிதைகளோடு கட்டுரைகளையும் காண்போர் இவ்வையம் நீங்கி அமைதி கொள்வர்; அகமகிழ்வர்.

கட்டுரைகளிலும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் கம்பர் திருவள்ளுவர், இளங்கோ ஆகிய மூவரையும் சேர்த்துக் குறித்துள்ளார். ஒளவையார், தாயுமானவர், ஆண்டாள்

36