பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்

-

தோற்றுவாய்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரை ஒரு மகாகவியென்று தமிழகம், தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். பாரத நாடு முழுவதும் கூட இப்போது அவரை தேசீய மகாகவியென்று அறியத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமான மகாகவி பாரதியை, அவருடைய பன்முகப் பரிமாணங்களை பாரத நாடு முழுவதிலும் நன்கறியச் செய்ய வேண்டியதும், அவருடைய பெருமைகளையும், சிறப்புகளையும் உலகறியச் செய்ய வேண்டியதும், பாரதம் முழுவதிலும், உலகம் முழுவதிலும் பரவியுள்ள தமிழ் மக்கள் ஒவ்வொருவருடைய கடமையாகும். தமிழர்கள் வாழும் சகல இடங்களிலும் தமிழ் சங்கங்கள் அமைத்து பாரதியையும் இதர தமிழ்ப் பெரும்புலவர்களையும் அவர்களுடைய சிறந்த இலக்கியப் படைப்புகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். அவைகளின் ஆழ்ந்த மனிதாபிமானக் கருத்துக்களையும் செய்திகளையும் நாடறிய உலகறியச் செய்ய வேண்டும்.

மகாகவி பாரதி, சங்க காலப் புலவர்கள், கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், தாயுமானவர், இராமலிங்க அடிகள் வழியில் தோன்றிய ஒரு தலை சிறந்த தமிழ்ப் புலவர். ஒரு மகாகவி, ஒரு ஆழ்ந்த தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும், தெய்வபக்தியும் கொண்டவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் தேச பக்த உணர்வையும் விடுதலை வேகத்தையும் கிளப்பிய ஒரு மாபெரும் புரட்சிகர ஜனநாயகப் பெரும்புலவன். ஒரு மாபெரும் விடுதலை வீரன்.