பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசீயம் நூலாசிரியர் : அ. சீனிவாசன் 1._தோற்றுவாய்: பாரதியின் தேசீயம், நமக்கு ஒரு புதிய காட்சியைக் காட்டுகிறது. ஒரு புதிய பார்வையைக் கொடுக்கிறது. பாரதியின் தேசீயம் பாரத தேசீயம். அது தேச பக்தியும் தெய்வ பக்தியும் இணைந்தது. வலுவான ஆன்மீகபலம் கொண்டது. பாரதியின் தேசீயம் என்பது நமது மலைகளும் ஆறுகளும், கடலும் இதர இயற்கை வளங்களும் நிறைந்தவை. அது நமது மக்களின் நமது விலங்கினங்களின் பறவையினங்களின் மரங்களின் இலைகளின் சின்னமாகும். இமயத்தின் உச்சியில் கைலாய மலையும், அதன் உயரங்களில் பத்ரிநாதரும் கேதார் நாதரும் நாம் வணங்கும் தெய்வங்கள் அம்மலைத் தொடர் புனிதமான தெய்வீகத்தன்மை கொண்டது. இன்றும் திருவேங்கடமும் சோலைமலையும் நமது தெய்வீகத் திருப்பதிகள் தமிழகத்தின் குன்றங்கள் அனைத்தும் குமரன் வாழுமிடங்கள். நமது மலைகளில் தோன்றி பொங்கி வரும் நமது ஆறுகள் எல்லாம் வெறும் குடிநீர் சாதனங்கள் நீர்ப்பாசன சாதனங்கள் மட்டுமல்ல. அவை நாம் வணங்கிப்போற்றும் தெய்வங்கள். நமது விருட்சங்கள் எல்லாம் தெய்வீகத்தன்மை பொருந்தியவை. கோவில்களில் ஸ்தல விருட்சங்களாகப் போற்றிப் பாதுகாக்கிறோம். நமது ஆவினம் தெய்வீகத்தன்மை கொண்டது. நமது காளைகள் சிவபெருமான் வாகனம். சிங்கமும், புலியும் நமது துர்க்கையின், ஐயப்பனின் வாகனங்கள். நமது மயிலும், சேவலும் கருடனும் நமது நாட்டின் தெய்வீகப் பறவைகள் இவையெல்லாம் நமது தேசீயத்தின் சின்னங்களாகும்.