பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை Ll முன்னுரை: தேசீயம், தேசிய அரசு, தேசிய இனம் என்னும் கருத்து வடிவங்கள் ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சியும் நவீன உற்பத்தி முறைகளும், நவீன போக்குவரத்து சாதனங்களும் தோன்றிய காலத்தில் உருவாகி நிலைபெற்றன. அதன் பின்னர், ஐரோப்பிய வல்லரசுகள், காலனி நாடுகளைப் பிடித்து ஏகாதிபத்ய ஆதிக்கமும் கொடுங்கோன்மையும் நடத்திய போது அதற்கு எதிராக விடுதலைப் போராட்டங்கள் வீறு கொண்டு எழுந்த போது ஆசிய, ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் தேசீய விடுதலை இயக்கங்களாக விரிவடைந்து அனைத்து நாடுகளிலும் தேசீயம், தேசிய அரசுகள், தேசிய இனங்கள், என்னும் கருத்து வடிவங்களும் பரவி மக்களுடைய உள்ளங்களில் இடம் பெற்றன. இவ்வாறாக, தொடர்ச்சியான பூமிப்பகுதி, அரசாங்க நிர்வாக எல்லைக் கோடுகள், வரலாறு பூர்வமான மக்கள் தொடர்பு, மொழி முதலிய காரணங்களின் விளைவாக, தேசீய இயக்கங்கள், விடுதலை இயக்கங்கள் தோன்றி சென்ற நூற்றாண்டில் பல பகுதிகளும் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றுப் பல தேசங்களும் தேசீய அரசுகளும் தோன்றின. இந்திய நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டு நிலைபெற்ற போது இந்திய மக்களுடைய நலன்களை முன்வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கத்திய சிந்தனைகளின் அடிப்படையில், இந்தியாவில் தேசிய இயக்கங்கள் தோன்றி, இந்திய தேசீய காங்கிரஸ் என்னும் தேசீய அமைப்பும் தோன்றி நிலைபெற்றது. இந்த இந்திய தேசீய காங்கிரஸ் அமைப்பு படிப்படியாக மக்களுடைய செல்வாக்கைப் பெற்று, இந்திய மக்களுடைய விடுதலைப் போராட்டத்தின் தலைமையாக முக்கிய தலைமையாக முன் நின்று, தனது வரலாற்றுப் பாத்திரத்தைச் செலுத்தியது.