பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 115

என்று அந்த சூத்திரம் குறிப்பிடுகிறது.

அன்னமும், பசுவும் தலை மாணாக்கருக்கு உவமை. பாலையும் தண்ணிரையும் கலந்து வைத்தால் அன்னம், அதிலுள்ள பாலை மட்டும் பிரித்து உட்கொள்ளும் தன்மை படைத்தது. அதைப் போல நாம் தலை மாணாக்கர் போல நூல்களைப் படித்து பகுத்துணர்ந்து நல்லனவற்றை கிரகித்துக் கொள்ளும் திறனைப் பெற வேண்டும். பாரதி நமக்கு அந்த அறிவுரைகனைக் கூறுகிறார்.

60. நெற்றி சுருக்கிடேல்

நெற்றி சுருக்கிடல் என்றால் முகம் சுழித்தல் ஆகும். நெற்றி சுருக்கிடேல் என்றால் முகம் சுழிக்காமல் முகமலர்ச்சியோடு இருத்தலாகும். நெற்றியைச் சுருக்குவது என்பது வறுமை, வெறுப்பு, ஒதுக்குதல் முதலிய கேடுகளால் ஏற்படுவதாகும். அடுத்தவர் மீது எந்த சூழ்நிலையிலும் வெறுப்படைதல் நல்லதல்ல. வறுமையும் தனிப்படுதலும் ஏற்பட்டாலும் முகம் சுருக்காமல் அடக்கமாக இருத்தல் சிறப்பாகும் எந்த சூழ்நிலையிலும் எல்லோரிடத்தும் அன்புடன் பழகுதல் நல்லது. சிரித்த முகத்துடன், எப்போதும் முகமலர்ச்சியுடன் இருப்பது சிறந்தது.

சிடுசிடுப்பாகவும் யாரிடமும் எரிந்து விழுதலும் பொரிந்து தள்ளுதலும் நெற்றி சுருக்குவதாகும். இவை நல்ல பண்புகளல்ல நல்ல பழக்கவழக்கமல்ல. தேவையில்லாமல் கோபப்படுவதும் ஆத்திரமடைவதும நெற்றி சுருக்குவதாகும். இது கூடாது என்று பாரதி குறிப்பிடுகிறார்.

அத்துடன் கொடுமையான வறுமை, கடுமையான கவலைகள், யாருடைய உதவியும் இல்லாமல் தனிமைப்பட்டு நிற்றல் முதலிய சில கடுமையான சூழ்நிலை காரணமாகவும் நெற்றி சுருக்கங்கள் ஏற்படும். எத்தகைய கவலைகளும் துன்ப துயரங்களும் சோதனைகளும் ஏற்பட்டாலும் முகத்தில் கவலையை வெளிக்காட்டாமல் முகமலர்ச்சியுடன் இருப்பது சிறப்பாகும். இடுக்கண் வருங்கால் நகுக என்பது வள்ளுவர் வாக்காகும்.