பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்ட தமிழறிஞரும் பத்திரிகையாளருமான ஆர். கே. கண்ணன் மு. பழனியப்பன் ஆகியோர் சிறப்பாக ஈடுபட்டிருந்தனர். ஜனசக்தி நாளிதழின் பாரதி நூற்றாண்டு விழா சிறப்பு மலர் மிகவும் சிறப்பாக வெளிவந்தது. பலராலும் பாராட்டப்பட்டது. அத்துடன் நாள்தோறும் ஜனசக்தியில் பாரதி பற்றிய பல கட்டுரைகளும் வெளிவந்தன, அந்தச் சமயங்களில் தான் பாரதியின் புதிய ஆத்திசூடிக்கு ஒரு தனியான விளக்கவுரை நூலும் எழுத எண்ணி இப்போது இந்த நூல் தயாராகியுள்ளது.

பல்வேறு வேலைகளுக்கும் இடையில் புதிய ஆத்திசூடிக்கான விளக்கவுரை நூல் வளரத் தொடங்கியது. அந்த நூல் முதலில் எழுதி முடிக்கப்பட்ட போது மிகவும் பெரியதாக அமைந்திருந்தது. அளவுக்கு மீறிய விளக்கம் அவசியமா என்று கருதி அதைச் சுருக்கிவி முயன்றேன், அத்துடன் அந்த விளக்கமான விரிவுரை எனக்கே விளக்கம் அளிப்பதைப் போல் இருந்தது. இந்த விளக்கவுரை பிரபலமான கற்றறிவாளர்கள் எழுதும் விளக்கவுரை போன்றதல்ல. எனது அனுபவத்திலிருந்து எழுந்த விளக்க உரையாகும்.

ஒரு முறை ஒரு உலகப் புகழ்மிக்க சமூக, அறிவியல் பேரறிஞர் ஒரு தத்துவஞான நூலை எழுதினார். அது அவர் காலத்திய வேறு சில தத்துவஞானிகளுக்குப் பதில் கொடுக்கும் முறையில் அமைந்த நூலாகும். அந்த அறிஞர் தனது விளக்க நூலை எழுதி வெளியிட்டபோது அவருடைய நண்பர்கள் இந்த நூலை நீங்கள் ஏன் எழுதியிருக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு எனக்கு நானே தெளிவுப்படுத்திக் கொள்வதற்காக நான் இந்த நூலை எழுதியிருக்கிறேன்” என்று அந்தப் பேரறிஞர் பதில் கூறினாராம். அதைப்போல் எனது சொந்தத் தெளிவுக்காக இந்த விளக்க உரையை எழுதத் துணிந்தேன் எனக் கூறலாம்.

அந்த வகையில் பாரதியாரின் படைப்புகளுக்கும், பாடல்களுக்கும் அவருடைய கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும், கதைகளுக்கும், கருத்துகளுக்கும் பல வகையான விளக்கங்களும் விமர்சனங்களும் பல்வேறு வகைளிலும் எழுந்திருந்தன. சில அவதுாறான கருத்துக்களும் கூட எழுந்திருந்தன.