பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 87

தன்னைக் கட்டுப்படுத்தி நடத்தல், பிறருடைய துயர்களைத் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், உயிர்களெல்லாம் இன்புற்றிருக்க வேண்டுதல் ஆகிய தன்மைகளை வளர்க்க வேண்டும்.

தன்னைத்தான் ஆளும் தன்மையைப் பெற்றிடில் எல்லாப் பயன்களும் தாமே எய்தும் என்று பாரதி கூறியதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

43. தாழ்ந்து நடவேல்

நம்மைத் தாழ்த்திக் கெண்டோ, கீழான முறையிலோ நாம் நடந்து கொள்ளக் கூடாது. தாழ்வு மனப்பான்மை கூடாது. பலவீனப்பட்டு விடக்கூடாது. உயர்ந்த எண்ணங்களும் நல்ல நடத்தையுமே கைக் கொள்ள வேண்டும்.

மடமை, சிறுமை, துன்பம், பொய், வருத்தம், நோவு, மற்றிவை போல் உள்ள தாழ்ந்த நிலை போக வேண்டும். அழுகுதல் சாதல், அஞ்சுதல் முதலிய இழிபொருள்களை விலக்க வேண்டும்.

அடிமை மனோபாவத்தை நீக்க வேண்டும். அதைப் புல்லடிமைத் தொழில் என்று பாரதி குறிப்பிடுகிறார். அந்த புல்லடிமைத் தொழிலை தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ள வேண்டும். நமக்கு இன்னல்கள் வரும் போது அதற்கு அஞ்சுதல் கூடாது. என்றும் ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம் என்றும், தன்னலம் பேணி இழிதொழில் புரியோம் என்றும் பாரதி கூறுகிறார்.

எப்போதும் கைகட்டி நின்று யாரிடத்தும் பூனைகள் போல் தாழ்ந்து நடக்கக் கூடாது. நீதிநூறு சொல்லுவாய் காசொன்று நீட்டினால் வணங்குவாய் போ, போ, போ என்று அத்தகைய இழிகுணத்தைச் சாடுகிறார்.

நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும் இல்லாமல் கண்கள் இரண்டிருந்தும் காணும் திறமையில்லாமல் அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டு மானம் சிறிதென்று எண்ணி, வாழ்வு பெரிதென்றெண்ணி தாழ்வுற்றுப் போகாதே என்று பாரதி தனது பாடல்கள் மூலம் இக் கருத்தை வெளிப்படுத்துகிறார்.