பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமஸ்தானத்தில் சின்னச்சாமி ஐயருக்கு செல்வாக்கு அதிகமாக இருந்தது. அவர் ராஜாவுக்கு மிகவும் வேண்டியவர். அதனால் பாரதியாருக்கும் அங்கே அதிக மதிப்பிருந்தது.

பாரதியார் இளமையிலேயே, கவிபாடுவார். இவருடைய திறமையை மெச்சி இவருக்கு பாரதி என்ற பட்டம் அளித்தார்கள்.

அதனால்தான் சுப்பிரமணிய பாரதியாரை நாம் பாரதியார் என்றே அழைக்கிறோம். பாரதி என்ற பட்டம் வாங்கியவர் பலபேர் இருந்தாலும் பாரதி என்று இன்று சொன்னாலே அது சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பதாக அமைந்துவிட்டது. மஹாத்மா என்று சொன்னால் எப்படி அது காந்தி அடிகளைக் குறிக்கிறதோ அப்படி பாரதி என்றவுடன் சுப்பிரமணிய பாரதியாரே நினைவுக்கு வரும்.

தந்தையான சின்னச்சாமி ஐயர் பாரதியாரின் இளம் பருவத்திலேயே இறந்துபோனார். அதனால் பாரதியார் காசிக்குச் சென்று சில ஆண்டுகள் தம் அத்தை வீட்டில் வாழ்ந்தார். அந்தச் சமயத்தில் ஹிந்தியும் சமஸ்கிருதமும் அவர் கற்றுக் கொண்டார்.

முன்பே இவர் எட்டயபுரத்தில் இருந்தபோது திருநெல்வேலி ஹிந்து கலாசாலையில் ஐந்தாம் படிவம்வரை ஆங்கிலம் கற்றிருந்தார்.

பாரதியார் தமது பதினெட்டாவது வயதில் காசியில் இருந்திருக்கிறார். அதனால் வங்காளத்தில் ஓங்கி வளர்ந்த தேசீய உணர்ச்சி இவர் உள்ளத்திலும் பாய்ந்து விட்டது. இளமைப் பருவம்தான் இப்படி உயர்ந்த எண்ணங்களெல்லாம் மனதில் பதிவதற்கு ஏற்றது அல்லவா?

6