பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தக் காலத்தில் நம்முடைய நாட்டுக் கப்பல்கள் தான் இந்தியக் கடற்கரை ஓரங்களிலுள்ள நகரங்களுக்கும் வேறு இடங்களுக்கும் செல்லுகின்றன. வியாபாரம் செய்யவும், பலவகையான பொருள்களையும் மக்களையும் ஏற்றிச் செல்லவும் அவை பயன்படுகின்றன.

ஆனால் அந்தக் காலத்தில் நமது நாடு அடிமையாக இருந்தபோது நம்மால் கப்பலோட்ட முடியவில்லை. அதற்கு வேண்டிய பொருள் வசதியும், அரசாங்க உதவியும் கிடையாது. வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள்தான் முதன் முதலில் துணிந்து பொருள் திரட்டிக் கப்பல் விட்டார். அவர் தேசபக்தி மிகுந்தவர். அவர் கலெக்டராக இருந்த வெள்ளைக்காரனாகிய விஞ்ச் துரையைப் பார்த்துக் கூறுவதாக இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கிறது.

பாரதியாரும் இவரும் நெருங்கிய நண்பர்கள். இரண்டு பேரும் தேசபக்தர்கள். சிதம்பரம் பிள்ளை பாரதியாரை மாமா என்றே அழைப்பார். மக்களுக்கு தேச பக்தி உண்டாவதற்கு இவரும் முக்கிய காரணம்.

சிதம்பரம்பிள்ளை விஞ்ச் துரையைப் பார்த்து மேலும் சொல்லுகிறார். எங்கள் செல்வத்தையெல்லாம் கொள்ளை கொண்டு போகிறீர்கள். நாங்கள் வறுமையால் சாகின்றோம். நாங்களும் உங்களைப் போல ஆண் பிள்ளைகள் தான். எங்கள் உயிர் வெல்லமல்ல. இந்த உயிர் போனாலும், நாங்கள் இனிமேல் பயப்படமாட்டோம். இப்படி அவர் சொல்வதாக பாரதியார் வீரா வேசங் கொண்ட பாட்டாக முழங்கினார். பாட்டையே கேட்கலாம்:

9