பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வயது வரும்போது நீங்கள் இந்தப் பாடல் முழுவதையும் படிக்கலாம். படிப்பதும் அவசியம். ஏனென்றால் இன்றும் நமது நாட்டு மக்களிடத்தில் இந்தக் குறைகள் எல்லாம் முற்றிலும் நீங்கவில்லை. பாரதியார் இப்படிப்பட்ட பல சிறந்த பாடல்கள் எழுதியிருக்கிறார். அந்தப் பாடல்கள் பெரும்பாலும் இந்தியா வார இதழில் வெளிவந்தன.

மேலும் தேச உணர்ச்சி மிக்க பல கட்டுரைகளும் எழுதினார். இவை தமிழ்நாட்டிலே தேசபக்தி வளரக் காரணமாக இருந்தன. ஆங்கிலேய அரசாங்கம் இந்த நிலைமையைக் கண்டு பயந்தது. பாரதியாரின் பாட்டைக் கேட்டால் செத்துப்போன பிணமும் உயிர் பெற்று விடும். அடிமையாக இருக்கும் நாடு விடுதலை உடனே அடையும் என்று வெள்ளைக்காரர்கள் அஞ்சினார்கள். அதனால் இந்தியா வார இதழைச் சென்னையிலிருந்து வெளிவராமல் தடுக்க எண்ணினார்கள். அதற்கு வேண்டியவாறு சட்டமும் கொண்டு வந்தார்கள்.

பாரதியார் பாண்டிச்சேரிக்குச் சென்றார். பாண்டிச்சேரிக்குப் புதுச்சேரி என்றும் புதுவை என்றும் பெயர்கள் உண்டு. பாண்டிச்சேரியும் இன்று இந்தியாவைச் சேர்ந்த ஒரு பகுதி என்பது உங்களுக்குத் தெரியும். அது அந்தக் காலத்தில் பிரெஞ்சுக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்தது. அங்கு ஆங்கிலேயரின் சட்ட திட்டங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆகவே பாரதியார் பாண்டிச்சேரிக்குச் சென்று அங்கிருந்து மறுபடியும் இந்தியா வார இதழை நடத்தத் தொடங்கினார். தமிழ் மக்கள் உள்ளத்திலே தேசபக்தி என்ற கனல் மேலும் மேலும் கொதித்தெழுந்தது.

இதைக் கண்டு ஆங்கிலேயர் மறுபடியும் பயப்பட்டார்கள். என்ன செய்யலாம் என்று யோசனை செய்-

12