பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தார்கள். அப்படி யோசனை செய்து பாண்டிச்சேரியில் வெளியாகும் இந்தியா வார இதழைத் தமது ஆட்சிக்குட்பட்டிருந்த தமிழ்நாட்டிற்குள் வரவொட்டாமல் தடுத்து விட்டார்கள். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் நாட்டில் அந்த இதழை வராமல் தடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு. இது அநியாயம் என்று யாரும் கேட்க முடியாது. ஆங்கிலேயர் வைத்தது தான் சட்டம் என்று அன்று இருந்தது.

பாண்டிச்சேரி ஒரு சிறிய பகுதி, அங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்றாலும் அவர்களுடைய ஆதரவைக் கொண்டு பத்திரிகை வெளிவரமுடியவில்லை. நிறையப் பிரதிகள் விற்பனையானால் தான் ஒரு பத்திரிக்கையை நடத்த முடியும். தமிழ்நாட்டிற்கு இந்தியா வார இதழ் வராமல் போகவே அதை நடத்த முடியாமல் போய்விட்டது.

பாரதியார் மனம் தளராமல் என்னென்னவோ பத்திரிக்கைகள் நடத்த முயன்றார். அந்த முயற்சியெல்லாம் வெற்றியாகவில்லை. தமிழ்நாட்டிலிருந்து பணம் பாண்டிச்சேரிக்குப் போவதையும் ஆங்கிலேயர் தந்திரமாகத் தடுத்து விட்டார்கள்.

இதனால் பாரதியார் வறுமையால் மிகவும் துன்பப்பட்டார். இவர் பாண்டிச்சேரிக்கு 1908 ஆம் ஆண்டில் சென்றார். அங்கிருந்து 1918 ஆம் ஆண்டில் முதல் உலக யுத்தம் முடிந்த பிறகுதான் தமிழ் நாட்டிற்கு வந்தார்.

அதுவரையில் சுமார் பத்து ஆண்டுகள் பாரதியார் இவ்வாறு வாடினார். இவருக்குச் சிறு வயதிலேயே திருமணமாகியிருந்தது. இப்படிச் சிறு வயதில் திருமணம் செய்து கொள்வதை பாரதியார் மிகவும் கண்டித்து எழுதியிருக்கிறார்.

13