பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தக் குழந்தை ஓடிவரும்போது பாரதியாரின் உள்ளம் குளிர்கின்றதாம்.

ஓடிவருகையிலே - கண்ணம்மா
உள்ளம் குளிருதடீ
ஆடித்திரிதல் கண்டால்- உன்னைப்போய்
ஆவி தழுவுதடி!

இப்படியெல்லாம் அழகாக எழுதுகின்றார். குழந்தைகளிடம் எவ்வளவு அன்பு பாரதியாருக்கு இருந்தது என்பதை இந்தப் பாட்டில் நன்றாக அறிந்து கொள்ளலாம்.

சொல்லும் மழலையிலே-கண்ணம்மா
துன்பங்கள் தீர்த்திடுவாய்
முல்லைச் சிரிப்பாலே-எனது
மூர்க்கம் தவித்திடுவாய்.

அந்தக் குழந்தை சிரிக்கின்ற சிரிப்பு முல்லைப் பூவைப் போல இருக்கிறதாம். சிரிக்கும் போது பல் எல்லாம் தெரிகிறதல்லவா? அவை முல்லை மலரைப் போல இருக்கிறதென்று அவர் எழுதுகிறார்.

அப்படிச் சிரித்து பாரதியாருக்கும் மூர்க்கம் (கோபம்) இல்லாதபடி செய்து விடுகிறதாம் அந்தக் குழந்தை!

இந்தப் பாடலை நீங்கள் முழுமையாகப் படித்து இன்பம் அடைய வேண்டும். இசையைப் பழகிப் பாடினால் மேலும் இனிமையாக இருக்கும்.

மற்றொரு பாடலிலே கண்ணனை விளையாட்டுப் பிள்ளையாக அவர் கூறுகின்றார். அந்தப் பாடலும் மிக அழகானது. இசைக் கச்சேரிகளிலே பெரிய பெரிய வித்வான்கள் அதைப்பாடி அங்கு கூடியுள்ளவர்களை யெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்கள்.

16