பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவ்வாறு பல சிறந்த நீதிகளை அவர் புதிய ஆத்திசூடியில் சொல்லியிருக்கிறார். நீங்கள் அவற்றை முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டும்.

யாரெல்லாம் நம் நாட்டிலே இருப்பதற்குத் தகுதி அற்றவர்கள் என்று, பாரதியார் ஒரு பாடலிலே காட்டுகிறார். அவர்களை எல்லாம் பேர் போ போ என்று வீர முழக்கம் செய்கிறார். அதே, சமயத்தில் யாரெல்லாம் நம் நாட்டிலே இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காண்பிக்கிறார். அவர்களை அன்போடு வா வா வா, என்றும் பாடுகிறார்.

தோள் வலிமையில்லாதவன் எதுவும் செய்ய முடியாது. மார்பு குறுகியவனும் கோழையாக இருப்பான். ஆகையால் அவர்களைப் பார்த்து;

வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ

என்று இப்படிப் பலரைப் பாரதியார் தேசத்திலிருந்து ஓடிப் போகும்படி சொல்கிறார். அதாவது இப்படிப் பட்டவர் நம் தேசத்திலே தோன்றக் கூடாதாம்.

நம் நாட்டிற்குக் கண்களிலே ஒளிபடைத்தவன் வேண்டும்; உறுதி கொண்ட நெஞ்சுள்ளவன் வேண்டும்; தெளிவான அறிபுடையவன் வேண்டும். இப்படி உயர்ந்த சிறப்புடையவர்களை வாவென்று அழைக்கிறார்.

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

22