பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சகுந்தலா என்ற பெயருடைய மற்றொரு குழந்தையும் இருந்தது. அதைப் பாப்பா என்று செல்லமாக அழைப்பார்கள். அந்தக் குழந்தை ஒரு நாள் ஏதோ குறும்பு செய்ததாம். அதற்காக பாரதியாரின் மனைவியான செல்லம்மா பாப்பாவை வைதார்களாம். அதனால் பாப்பா அழுதது.

பாரதியாருக்கு எந்தக் குழந்தையும் அழுவது பிடிக்காது. தம்முடைய அருமைப் பாப்பா அழுவதைக் கண்டு அவர் பொறுப்பாரா?

இனிமேல் இந்தக் குழந்தையை நானே கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லி எடுத்து அனைத்துக் கொண்டார். அப்பொழுது பாப்பாவுக்கு ஓர் அருமையான பாட்டைப் பாடினர். அதில் உள்ள கருத்தை மிக நன்றாக எல்லாக் குழந்தைகளும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைப் பற்றித் தனியாகவும் சற்று விரிவாகவும் பின்னல் எழுதுகிறேன்.

இப்பொழுது பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை முதலில் தொடர்ந்து சொல்லுகிறேன்.

பாரதியார் சுமார் பத்து ஆண்டுகள் பாண்டிச்சேரியில் வாழ்ந்தார். 1908-ல் அங்கு சென்றவர் 1918 வரையில் தமிழ்நாட்டிற்குள் வரவில்லை என்று முன்பே சொன்னேன். 1914 ஆம் ஆண்டிலே முதல் உலகயுத்தம் தொடங்கிற்று. அது 1918 ஆம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் பயங்கரமாக நடந்தது. பலபேர் மடிந்தார்கள். எத்தனையோ துன்பம் ஏற்பட்டது.

கடைசியில் யுத்தம் முடிந்தது. முடிந்த பிறகு ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குச் சுதந்திரம் ஓரளவாவது கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.

25