பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவர் இவருடைய பாடல்கள், மற்ற இலக்கியங்கள் மூலம் என்றும் சிரஞ்சீவியாக நம்முடன் வாழ்கிறார். இவருடைய உடம்பு மறைந்த பிறகே தமிழர்களும், மற்ற இந்தியர்களும் இவருடைய பெருமையை நன்கு உணர்ந்தார்கள்.

பாரதியாருடைய பாடல்கள் முழங்காத பேச்சு மேடையே அன்று இல்லை என்று சொல்லலாம். நாட்டிற்காக உழைத்த தொண்டர்களின் நாவில் பாரதியார் பாட்டே ஒலித்தது. பாரதியார் பாட்டைக் கேட்டவர்கள் ஆர்ப்பரித்து எழுந்தார்கள்.

அதனால் ஆங்கிலேய அரசாங்கம் இவருடைய பாடல்களைப் பாடக்கூடாது என்று தடை உத்திரவு விதித்தது. பாரதியார் நூல்களை யெல்லாம் பறிமுதல் செய்து எடுத்துக் கொண்டது.

இதனால் பாரதியார் பாடல்கள் மறைந்து விடவில்லை. அதன் பிறகுதான் பாரதியாரின் பாடல்களின் சிறப்பைப் பலரும் உணரலாயினர். எல்லாரும் பாடத் தொடங்கினர்கள். பாரதியார் பாடலுக்கு உள்ள பெரிய சக்தியை எல்லாரும் தெரிந்து பாராட்டினர்கள்.

பாரதியார் பிறந்த ஊரில் இவர் நினைவாக பாரதி மண்டபம் கட்டினார்கள். ஆண்டு தோறும் செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழ் நாடெங்கும் பாரதி விழாக் கொண்டாடினார்கள். இன்றும் கொண்டாடுகிறார்கள். பாரதி சங்கம், பாரதி இளைஞர் சங்கம் என்று இப்படி இவர் பெயரால் பல சங்கங்கள் தோன்றியிருக்கின்றன. பாரதியாருடைய வாழ்க்கையைப் பற்றியும் இவருடைய நூல்களின் சிறப்பைப் பற்றியும் பல சிறந்த எழுத்தாளர்கள் தனித்தனி நூல்கள் எழுதியிருக்கிறார்கள். சென்னைக் கடற்கரையில் பாரதியாரின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

29