பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்யும். அதனால் அந்த நேரத்தில் படிப்பது நல்லது. பிறகு பாட்டுப்பாடிப் பழக வேண்டுமாம்.

உடல் உறுதி வேண்டுமல்லவா? அதற்கு மாலை முழுவதும் விளையாட வேண்டுமாம். இதை நாள்தோறும் பழக்கத்தில் கொண்டு வருவது நல்லது. இளமையிலேயே ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் பிறகு அது மாறாது.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா

.


தெய்வம் நமக்குத் துணை

அரிச்சந்திரனுடைய் கதை கேட்டிருக்கிறீர்களா? அவன் பொய்யே சொல்ல மாட்டானாம். எவ்வளவோ துன்பம் வந்த காலத்திலும் அவன் பொய் சொல்லவே இல்லை. அவனுடைய அரசு போய் விட்டது. மற்ற செல்வங்களெல்லாம் போய்விட்டன. எத்தனையோ துன்பங்களை அவன் அனுபவித்தான். இருந்தாலும் பொய் சொல்லாமல் சத்தியத்தையே நம்பி வாழ்ந்தான். கடைசியில் வெற்றியும் அடைந்தான். அதனால் அரிச்சந்திரனை உலகம் புகழ்கின்றது. அவனுடைய நினைவை என்றும் மக்கள் மறப்பதில்லை. அரிச்சந்திரனுடைய கதையை நாடகமாக நடிப்பார்கள். அப்படி ஒரு நாடகத்தைக் காந்தி அடிகள் இளமைப் பருவத்தில் பார்த்துத் தாமும் அரிச்சந்திரனைப் போலப் பொய்யே சொல்லக் கூடாது என்று உறுதியாக இருந்தார். அதனால் காந்தி அடிகளை இன்று உலகம் போற்றிப் புகழ்கின்றது.

35