பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாரதியார் பொய் சொல்லக் கூடாது; கோள் சொல்லக் கூடாது என்று மேலும் பாப்பாவுக்கு அன்போடு சொல்லுகிறார். பொய் சொல்லாமல் இருந்தால் யாதொரு தீங்கும் வராது. கடவுள் துணை செய்வார் என்கிறார்.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்ல லாகாது பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்கு வரமாட்டாது பாப்பா.

பயம் கூடாது

யாராவது நமக்குப் பாதகமாக ஏதாவது செய்ய வந்தால் அதற்காக பயம் கொள்ளக் கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும். பாதகம் செய்பவர் முகத்தில் உமிழக் கூடிய தைரியம் இருக்க வேண்டும். பாரதியார் இந்த இடத்தில் கண்டிப்பாகவே சொல்லுகிறார். துன்பம் வந்தாலும் அதற்காக மனம் சோர்ந்து போகக் கூடாது. சோராமல் இருப்பதற்கு பாரதியாரின் வாழ்க்கையே நமக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இவர் எத்தனையோ துன்பங்களைப் பாண்டிச்சேரியில் அனுபவித்துக் கொண்டிருந்த போதிலும் மனம் சோராமல் இருந்து அழகான கவிதைகளை யெல்லாம் நமக்குத் தந்திருக்கிறார் அல்லவா?

துன்பம் நெருங்கி வந்தபோதும் - நாம்
சோர்ந்து விடலாகாது பாப்பா
அன்பு மிகுந்த தெய்வமுண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

36