பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!...... 11

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே;-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திட்டி பாப்பா!...... 12

வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!...... 13

வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு;
சேதமில்லாத ஹிந்துஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!...... 14

சாதிகள் இல்லையடி பாப்பா!- குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி கல்வி-அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்...... 15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும-இது
வாழும் முறைமையடி பாப்பா!...... 16

45