பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xíí

பாரதி தமிழ்


குறிப்பாகச் சிலவற்றையே காட்ட இயலும். பொதுவாக ஒர் உண்மையை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். கூடுமான வரையில் பிற மொழிச் சொற்கள் கலவாத ஓர் உயிரோட்ட முள்ளதும் எளிமையானதுமான உரைநடையை வளர்ப்பதில் அனைவரும் இன்று ஆர்வம் காட்டுகின்றார்கள். நாளிதழ்களும், மற்ற இதழ்களும் இம்முயற்சியை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிமிர்ந்த பார்வையும், நேர் கொண்ட நன் நடையும் நம் பெண்களுக்கு வேண்டும் என்று வற்புறுத்தியவர் பாரதியார். அவருடைய கவிதைகளும், உரைநடைப் படைப்புகளும் இவ் வுணர்ச்சியை எதிரொலிப்பனபோல் எளிமையும் உள்ளத்தை நேராகத்தாக்கும்படியான வலிமையும், சிந்தனைத் தெளிவும் கொண்டிருக்கின்றன. அவருடைய கவிதைகளை ஆராய்வது போல உரைநடையை ஆராய்ச்சி செய்யப் பெரியதோர் முயற்சி நடைபெறவில்லை என்றுதான் கூறவேண்டும். வட மொழிச் சொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர் எழுதிய காலத்தை எண்ணத்திற் கொண்டு பார்த்தால் ஏன் அவ்வாறு எழுதினர் என்பது புலனாகும். அன்று அவர் நோக்கமெல்லாம் மக்களுக்குத் தெளிவாகவும், அழுத்தமாகவும், உள்ளத்தை கவ்வும்படியாகவும் எழுதவேண்டும் என்பதுதான். அந்த முயற்சியில் அவர் மிகச் சிறந்த வெற்றி பெற்றிருக்கிறார். அவருடைய உரைநடைப் படைப்புகளை ஆராய்ந்தால், நேர் கொண்ட நன் நடையும், நிமிர்ந்து பார்க்கும் தெளிவும் அவற்றில் ஊடுருவி இருப்பதையும், வலிமையான உயிரோட்டம் இருப்பதையும் காணலாம். இந்தத் தொகுப்பிலே சேர்க்கப்பட்டுள்ள அவருடைய உரைநடைக் கட்டுரைகள், கதைகள், முதலியவற்றைப் படிக்கும்போது சுற்றி வளைக்காமல் தெளிவாகக் கருத்துக்களைச் சொல்லுவதில் பாரதியாரின் தனித் திறமையை அறிந்து மகிழ முடியும். அத்துடன் அவருடைய நகைச்சுவையும் வெட்டொன்று துண்டிரண்டு என்ற உள்ளப் பான்மையும் வெளியாவதையும் காணலாம். அவருடைய ஞானரதம் உரைநடையில் மிகச் சிறந்த படைப்பாகும்.