பக்கம்:பாரதீயம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வசன கவிதைகள்

சென்ற நூற்றாண்டு வரையில் தமிழ் இலக்கியம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்து வந்தது. வானியல், மருத்துவம், தத்துவம், தருக்கம் போன்ற எந்த நூலாக இருந்தாலும் அவையனைத்தும் செய்யுள் நடையில்தான் அமைந்தன. அச்சுப்பொறி அறியப் பெறாத காலத்தில் ஏடும் எழுத்தாணியும் கொண்டு விரைவில் எழுதி முடிக்கவும், எழுதியவற்றை எளிதில் நினைவில் நிறுத்தவும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றைச் செவிவழியாகக் கடத்துவதற்கும் செய்யுளின் ஒசையும் யாப்பு முறையும் உறுதுணை புரிந்தன. இலக் கியமும் செவிநுகர் கனி யாகத் திகழ்ந்ததற்கு இதுவே சிறப்பான காரணம் எனக் கருதலாம். இதனால்தான் உரையாசிரியர்களும் திட்பமும் நுட்பமும் கொண்ட உரைகளைச் சுருக்கமாகவே எழுத நேர்ந்தது. இக்காலத்தில் இவ்வுரையைப் புரிந்துகொள்வதற்குச் *சர்பத் கலக்குவதுபோல் மேலும் சொற்களைப் பெய்து நீராள மாகச் செய்து விளக்க வேண்டிய இன்றியமையாமையும் ஏற்பட்டு வருகின்றது.

இன்றைய நிலை வேறு. நாம் வாழ்வது அறிவியல் தொழில் நுட்பக் காலம். தட்டச்சுப் பொறி, அச்சுப் பொறி, அச்சுப் பொறி களிலும் பல்வேறு நுட்ப வகைகள்-இவை எழுதுவதற்குத் துணை யாக அமைந்துவிட்டன. நாடாப் பதிவும், பிலிம் படங்களில் பதிவு செய்யும் முறையும், நூலக அமைப்பு முறைகளும் எழுதிய வற்றைப் பேணும் சாதனங்களாக அமைந்துவிட்டன. செவிப்புலன் ஆட்சியைவிடக் கட்புலன் ஆட்சி மிகுந்துவிட்டது. எவற்றையும் நினைவில் நிறுத்தித் தலைக்கணம் செய்ய வேண்டிய இன்றியமை யாமை இல்லாது போய்விட்டது. கல்வி முறையிலும் நெட்டுருச் செய்து நினைவிலிருத்த வேண்டிய முறை தளர்ந்துவிட்டது; தகர்ந்தே போய்விட்டது என்றுகூடச் சொல்லலாம். வாய்விட்டுப் படித்தல் குறைந்து வாய்க்குட் படித்தல் செல்வாக்கு அடைந்துவிட்டது. ஒரே அறையில் - பெரிய மண்டபத்தில் - பலர் இருக்கைகளில் அமர்ந்து கல்லாலின் புடை அமர்ந்துள்ள தென்முகக் கடவுள்போல் நூல் களிலும் வார, பிறை, திங்கள் இதழ்களிலும் ஆழங்கால் பட்ட நிலை யில் அமர்ந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதை நூலகங்களில் காணலாம். இந்தச் சூழ்நிலையில் செய்யுள் வடிவம் செல்வாக்கிழந்து, உரைநடை வடிவம் உயர்ந்தோங்கிவிட்டது. மேனாட்டார் வருகைக்குப் பிறகு உரைநடை இலக்கியங்களான புதினம், சிறுகதை, கட்டுரை வகைகள் ஆகியவை தோன்றி,வளர்ந்து; நிலைத்து நின்றுவிட்டன. இந்த நிலையில் கவிதையும் உரைநடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதீயம்.pdf/132&oldid=681154" இலிருந்து மீள்விக்கப்பட்டது