பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் "யாமறிந்த மொழி களிலே தமிழ் மொழி போல் இனியதாவது எங்கும் காணோம்' என்று கூறினான். "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங் கணுமே பிறந்ததில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை" என்று பாடினார். இதன் மூலம் அவர் தனது மரபுவழியை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். பாரதி தமிழ் மொழி மட்டும் அறிந்தவனல்ல. ஆங்கிலம், பிரஞ்சு, இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம் முதலிய மொழிகளிலும் அவருக்கு பயிற்சியும் பரிச்சயமும் உண்டு. வங்காளி மொழி பற்றியும் அவருக்கு அறிமுகம் உண்டு. அதனால் தான் அவர் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனியதாவது எங்கும் காணோம் என்று பெருமைப்படப் பேசினார் போலும். பாரதி வியாசரையும், வால்மீகியையும், வேதங்களுக்கு விளக்கம் கூறிய வசிட்டரையும் வாம தேவரையும் இன்னும் மனுவையும், கெளடில்யரையும், அடுத்து வந்த காளிதாசரையும் தன் காலத்திய ரவீந்திரநாத் தாகூரையும் மற்றும் ஆங்கில, பிரஞ்சுப் புலவர்களையும் படித்தவர். அறிந்தவர். இருப்பினும் யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல, வள்ளுவர் போல், இளங்கோவைப் போல பூமியில் யாங்கனுமே கண்டதில்லை என்று பெருமையுடன் பாடுகிறார். "செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்று தொடங்கி, "வேதம் நிறைந்த தமிழ் நாடு. வீரம் செறிந்த தமிழ் நாடு இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு, முத்தமிழ் மாமுனி காக்கும் தமிழ்நாடு கல்வி சிறந்த தமிழ்நாடு கம்பன் பிறந்த தமிழ்நாடு", {}| "பலவித சாத்திரங்களின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் படைத்த தமிழ்நாடு கலை ஞானமும் படைத் தொழிலும் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு" என்றெல்லாம் தமிழ் மண்ணைப் புகழ்ந்து பாடுகிறார். அதைக் கேட்கும் போது நமக்கு உடம்பு சிலிர்க்கிறது. ரோமங்கள் புடைக்கின்றன. உள்ளம் மகிழ்ச்சியடைந்து பூரிக்கிறது. காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை ஆகிய ஐந்து பெரிய ஆறுகளும் தமிழ்நாட்டில் பாய்கின்றன.இவை, பாரதநாட்டின் கங்கை, யமுனை, சிந்து, பிரம்மபுத்திரா. கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா நதிகளைப் போன்ற புண்ணிய நதிகளாகப் பாடல் பெற்றவை. இந்த ஐந்து ஆறுகளுடன் மேலும் பல சிற்றாறுகளும் துணை ஆறுகளும் கிளை ஆறுகளும் ஓடி தமிழகத்தின் மேனி செழித்து அதன் நாகரிகம் பரவியுள்ள திருநாடு. தமிழ்த் தாயை ஆதி சிவன் பெற்று விட்டான் என்றும், அகத்தியன் இலக்கணம் செய்தான் என்றும் மூன்று குலத்தமிழ் மன்னர் தமிழ் மண்ணில் நல்லாட்சி நடத்தினார்கள் என்றும் ஆரியத்திற்கு நிகராகத் தமிழ் மொழி வாழ்ந்தது என்றும் புலவர்கள் பலரும் தீஞ்சுவைக் காவியங்களும் பல சாத்திரங்களும் செய்தார்கள் என்றெல்லாம் பெருமைப்பட்டாலும் தமிழின் தற்கால நிலை கண்டு பாரதி கலக்க முற்றான். கவலைப்பட்டான். புத்தம் புதுக்கலைகள், பஞ்சபூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மேன்மைக் கலைகள், தமிழினில் இல்லை என்னும் வசைச் சொல்லைத் தடுக்க, "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று பாரதி ஆணையிட்டார். அத்துடன் தமிழனுக்கு பாரதி மிகப் பெரிய கடமைகளை வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ளார். வெறும் பழம்பெருமை பேசிப் பலன் இல்லை. தமிழ் மொழி போல் இனிய மொழி உலகில் வேறு எங்கும் இல்லை. இருப்பினும் நாம் பாமரராய் விலங்குகளாய் உலகோர் எல்லாம் இகழ்ச்சியாகப் பேசுவதற்கு இடம் தரலாமா? எனவே நீ என்ன செய்ய வேண்டும்?