பக்கம்:பாற்கடல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

5


நடுக்காரியாலயத்தில் அத்தனைபேர் நடுவில் காலில் விழுந்து நமஸ்கரித்தான். அது அவனுக்கும் விளம்பரம் தான் என்றாலும் எனக்குப் பெருமையாகத்தானிருக்கிறது.

இதில் ஏதோ கவிதை நயம் இல்லை?

பெரியோரைப் புகழ்வோம்.

பூவோடு சேர்ந்த நாராக மணப்போம் என்று மனப்பூர்வமாக எண்ணினும் அதிலும் சூட்சுமமான சுய புராணம் வெளிப்படுகிறது. பக்கத்து இலைக்குப் பரிமாறச் சொன்னவனுக்கும் பாயசம் கிடைக்கிறது.

Let us praise great men.

நன்றியுடன், அவர்களைப் பற்றிய நினைவுக்காகவே நன்றியுடன், அதுவே நம் சந்தோஷமாகப் பெரியோரைப் புகழ்வோம்.

நான் புகழும் பெரியோர்கள், அச்சிலோ, மேடையிலோ, வேறெந்த சம்பிரதாய முறையிலோ பொது மக்கள் கவனத்திற்கு வந்திருக்கமாட்டார்கள்.

தான் உண்டு தன் காரியமுண்டு. தன் தறியில் அறுந்த நூலை முடி போட்டு, அதுவே கவனமாய், அதுவே தங்கள் பரவசமாக, முழம் முழமாய் திரௌபதியின் துகிலை நெய்பவர்கள்.

ஒரு முறுவலில், ஒரு சொல்லில், ஒரு சிறு சைகையில் ஒரு சிடுசிடுப்பில் ஒரு திருப்புமுனையையே ஏற்படுத்தும் சக்தர்கள், சக்திகள் இன்னும் இருக்கத்தான் இருக்கிறார்கள். என்னுடைய பெரியவர்கள் அவர்கள்தான். தங்கள் பிரஸன்ன வாஸத்தை இங்கேயே விட்டுச் சென்றவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/11&oldid=1532896" இலிருந்து மீள்விக்கப்பட்டது