பக்கம்:பாற்கடல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

107


மனுஷாளைக் கொஞ்சம் நைச்சியம் கட்டிக்கொண்டு போயிருந்தாரானால் வித்வத் பிரகாசித்திருக்கும்; குடும்பம் உருப்பட்டு இருக்கும். எங்கள் ஜாதகமே திசை மாறியிருக்கும். கால்மேல் கால் போட்டுக்கொண்டு, “ஏ எச்சுமி, இந்தப் பாட்டில் இந்த வரி எப்படி? ஏ சீமதி, நீ என்ன சொல்றே?" என்று திண்ணை தர்பார் நடத்திக் கொண்டிருந்தால் ஆகிவிட்டதா?

அரேரே எச்சுமி வந்துட்டாளா? இவள் தாத்தாவின் தங்கை லகஷ்மி அல்ல. இது வேறு எச்சுமி. இவர் வாங்குகிற பதினஞ்சு ரூபாய் சம்பளத்தில் ஒரு அந்தஸ்து லக்ஷ்மி. அப்படியேனும் லக்ஷ்மிகரம் உண்டா ? யோகாம்பாள் அளக்கிற படியில் சில சமயங்களில் பங்குக்கு வந்துவிடுவாள்.

லக்ஷ்மியை முதன் முதல் அவள் அடையாளத்தடன் பார்த்தபோது அவள் கிழவியாகிவிட்டாள். "இப்போ இப்படி ஆயிட்டேனே என்று பார்க்காதே. அந்தக் காலத்தில்." என்று தனக்குத் தானாவது பீற்றிக்கொள்ளுமளவுக்குச் சிதைந்த களைகூட அவளிடம் ஏதுமில்லை.

பிரம்மோத்ஸவத்தின் போது ஊர்வலத்துக்குப் பின் கோயிலுள் நடராஜா சன்னதிக்கெதிரே உத்ஸவரை இறக்கி, அங்கே நாயனக் கச்சேரி, கும்மி கோலாட்டம் பரத்நாட்டியம், தேவாரம், கேளிக்கை, உபசாரங்கள் நடக்கும். அங்கிருந்து பள்ளியறைக்கு எழுந்தருளப்பண்ண மணி ஒன்று, இரண்டு ஆகிவிடும்.

அந்தச் சமயத்தில், பழைய பாரம்பரிய உரிமையில் கும்மியடிக்கும் தேவதாசிக் கூட்டத்தில் லக்ஷ்மியும் கலந்துகொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/113&oldid=1533965" இலிருந்து மீள்விக்கப்பட்டது