பக்கம்:பாற்கடல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

109


ஓட்டை விழும். இது பேச்சு சாமர்த்தியமல்ல. வயிற்றுக் கொடுமையில், ஒழுங்கை உள் தந்த இருளின் தஞ்சத்தில் மானம் வடித்த கண்ணீரில் ஊறிப்போய், நேரிடையாக நெஞ்சம் திறந்த வாக்கு.

இப்போதோ -

காலேஜிலிருந்து, ஆபிஸிலிருந்து, இல்லை வெட்டிக்கு வெளியே சுற்றிவிட்டு வந்து உள் நுழைந்ததும்,

“என்ன இன்றைக்கு, இட்டிலிதானா டிபன்?”

"அடே, என்கையாலேயே அரைச்சேண்டா, அரவை மெஷினில் கொடுத்தால் புளிச்சுப்போகுமேன்னு சட்னி அரைச்சிருக்கேன். உடைத்த கடலை சட்னி சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு வேறே!” தாயார் கெஞ்சுகிறாள்.

சமையலறையில் இது நடக்கிறது.

வாசற்பக்கம் என் அறையில் (சிறையில்) நான் உட்கார்ந்திருக்கிறேன்.

காக்ஷிவியின் கொடுமை மட்டும் எனக்கு வடி கட்டுகிறது.

உடல் ஒருதரம் குலுங்குகிறது. உள்ளம் சுருங்குகிறேன். தப்புப் பண்ணிவிட்டாற்போல் தலை குனிகிறேன். இன்று மௌனவிரதம் வேறு வாய் அடைத்துப் போயிற்று. வாய் இருந்தால் மட்டும் நான் என்ன செய்ய முடியும்? இது, இந்தத் தலைமுறை. இதற்குப் பசியின் அவா அடைத்துவிட்டது. புதுமையின் அவா மட்டும் திறந்துகொண்டது. அடங்காத அவா.

அண்ணா சொன்ன கதை ஞாபகம் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/115&oldid=1533967" இலிருந்து மீள்விக்கப்பட்டது