பக்கம்:பாற்கடல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

லா. ச. ராமாமிருதம்


செயல் என்னவோ ஒன்றுதான். ஆனால் அதன் மொழிபெயர்ப்புகள் தனித்தனி அந்தந்த சமயத்தில் அவரவர் கண்டபடி அவரவர்க்குக் கிடைத்த வரப்ரஸாதம், முகூர்த்த வேளைகள் நம்மைத் தாண்டிய வண்ணமிருக்கின்றன. அந்த வேளைச்சிறகு தோல்மேல் உராயும் படபடப்பை அடையாளம் கண்டுகொள்வதோ, அந்த வேகத்தை இருத்திக்கொள்ள முயல்வதோ, அதில்தான் எழுத்தின் இறுமாப்பு.

ஆனால் நாளடைவில் வெறும் சாதகவாயிலாகவே எழுத்துக்கு ஒரு செருக்குச் சேர்ந்துவிடுகிறது. ரோசனப் பிசுக்கு இருக்கட்டும். இருக்க வேணும். எழுத்தும் இதயமீட்டல்தானே! புவனமென்னும் இந்தப் பெரிய வாத்ய ஸம்மேளனத்தில் - இங்கே தொட்டதெல்லாம் வாத்யம். பட்டதெல்லாம் நாதம். எழுத்தாளனுக்கு இல்லாத பங்கா?

நான் இருக்கிறேன்’ இதுவே புவனகீதம். இதைப் பாடுவது ஜீவனுக்கு ஏற்பட்ட வாய்ப்பு, பாக்கியம்.

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகை ஆசிரியர் தன் பத்திரிகையில் ஒன்றரைப் பக்கங்களுக்கு மேற்படாமல் எழுத எனக்கு ஒரு தலைப்புக் கொடுத்தார், “எங்கள் லால்குடி வீடு”

எங்கள் வீடு பற்றி அவருக்கென்ன தெரியும்? அவர் விதித்த மீட்டருக்குள், - ஏன், எந்த மீட்டருக்குள்ளும் எங்கள் வீடு அடங்காது. ஆதலால் அவர் அழைப்பை நான் ஏற்கவில்லை.

ஆனால் அந்தத் தலைப்பு கடுக்க ஆரம்பித்து விட்டது. தன் உயிர் வளர்ந்து, இன்னொரு வாரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/12&oldid=1532899" இலிருந்து மீள்விக்கப்பட்டது