பக்கம்:பாற்கடல்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

117


உடலுக்கும், ஆத்மாவிற்கும் இடைப்பாலம், சமாதானம், உறவின் நேர்த்திதான், பாஷையும் அதன் பல நயங்களும். இந்த உவமைகள், சொல் 'சுறீல்'கள், துள்ளு மீன்போல் மனம் தாவித் தாவிக் கண்டுவிட்ட வேறு தடத்து ருசி.

அவ்வப்போது புத்துயிர் கொண்டும் வேறு பிரதேச பாஷைகளின் கலப்பினாலும், சொந்த பாஷை செறிவும் உரமும் பெறுகின்றது. சொந்த பாஷையின் சுயத்தனமும் சேர்ந்து பெருங்கிளையில், புதுத்தண்டு முளைத்தாற் போல் செடியில் புது மொட்டுக் கட்டினாற்போல், சுய பாஷை ஒன்று உருவாகின்றது.

அத்தனையும் ஒரே செடியில் பூத்த மலர்கள். ஆனால் மலருக்கு மலர் அதனதன் விதி தனித்தனி.

கொண்டையில் ஏறுபவை சில, பூமியில் உதிர்பவை பல.

அவள் பாதகமலங்களுக்கு அர்ச்சனையில் தூவப் பெறுபவை எத்தனை?

இலை மறைவில் இதழ்கள் சிவந்து, காண்பார் அனுபவிப்பாரற்று,

தனக்கும் பயனற்று, தான் கழலும் மலர்ச்சிகள் எத்தனை எத்தனை?

பாஷையின் உச்சகட்டங்களில் உருவாகி, நாட்டின் பண்பை வெளிப்படுத்துபவை அதன் பழமொழிகள். ஏடு, எழுத்தின் வரம்பைக்கூடத் தாண்டி, வாய்மொழியாகவே வழிவழியாக இறங்கும் தலைமுறையின் ஊட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/123&oldid=1533975" இலிருந்து மீள்விக்கப்பட்டது