பக்கம்:பாற்கடல்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

லா. ச. ராமாமிருதம்


கொண்டவர்கள், அடாவடிகள் - இந்தப் பட்டினிக் கிராக்கி வீட்டில், ஸ்ர்வ ஸாது மன்னி எப்படி மாட்டிக் கொண்டாள்? இந்த நிலை அவளுக்குத் தேவையில்லை. 'ஆஹா ஒஹோ' என்று இல்லாவிடினும் அவள் பிறந்த வீட்டில் பசி கிடையாது. தகப்பனார் கனம் பண்ணினவர். ப்ரவசனம் வேறு சொன்னார். இதில் வருமானம் தவிர, கொஞ்சம் பூஸ்திதியும் இருந்தது. கூடப் பிறந்தவன் ஒரு அண்ணாவுடன் சரி.

ஏன்? ஏன்? ஏன்?

இது எத்தனையாவது முறை சொல்கிறேனோ? ஏன்? ஏது? எப்படி? இந்தக் கேள்விகளுக்கு அவள் காலத்தில் சிறு தலைகளுக்கு உரிமை கிடையாது. ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்! எல்லாம் அதில் முடிந்துபோய் விட்டது. அவர்கள் தீர்மானித்து முடித்ததுதான். ஊர்கள் கிட்டக் கிட்ட அவற்றில் முடங்கிய உறவுகள் ஆயிரம், இங்கே தொட்டு அங்கே தொட்டு தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு ஏற்கெனவே ஒரு முடிச்சு எங்கேனும் இருக்கும். உறவுகள் விட்டுப் போக முடியாது. அம்முவாத்துச் சம்பந்தம் லேசில் கிடைக்கக் கூடியதா? ராஜ சம்பந்தம் அல்லவா?

மன்னி இந்த வீட்டில் புகுகையில் அவளுக்கு வயது எட்டோ, ஒன்பதோ? தாத்தாவுக்குப் பதினாறு. அவர் பொடி போட ஆரம்பித்தாகிவிட்டது. பாடவும் ஆரம்பித்துவிட்டார்.

கஷ்டம் தெரியாமல் வாழ்ந்துவிட்டுச் சோறு துணிக்கு லாட்டரி அடிக்கும் இடத்துக்கு திடீரென மாறியதும் குழந்தைக்கு எப்படி இருக்கும்? அவரவர் நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/136&oldid=1532622" இலிருந்து மீள்விக்கப்பட்டது