பக்கம்:பாற்கடல்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

133


என்கிற அர்த்தம் அல்ல. தனிக் கனிவும் கிடைத்திருக்காது. பத்தோடு பதினொன்று - தப்பு, குடும்பத்தில் அவள் வந்தபோது எத்தனை எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. எல்லோருக்கும் வழங்கப்படும் பொதுப்படை அலட்சியத்தில், தன் நாமதேயமற்று, (ஏ குட்டீ !' அல்லது) “ஏ , கிருஷ்ண சாஸ்திரிகள் பெண்ணே!” - கண்டிப்பாக அவளுக்கு இட்ட பெயர் ஸீதாலக்ஷ்மி என்று அழைக்கவில்லை. அது நிச்சயம். அந்தக் காலத்துப் பாணி அப்படி) வளைய வந்திருப்பாள்.

வந்த புதிதில் மன்னிக்கு இந்தக் கூட்டத்தில் ஸல்லோ புல்லோ என்று சந்தோஷமாகத்தான் இருந்திருக்கும். பிறந்த வீட்டில் அவள் தாயில்லாக் குழந்தை. இந்தக் கலகலப்பு ஏன் பிடிக்காது? ஆனால் போகப் போக, ஒருநாள் குழம்பு தீர்ந்துபோச்சு, ஒருவேளை சாதம் தீர்ந்துபோச்சு, ஒருநாள் மூலைப் பழையதும் காலி’ என்கிற நிலைமை அடிக்கடி நேர, பசி தாங்காமல் அழுகை வருகையில் யாரிடம் போய்ச் சொல்லிக் கொள்ள முடியும்?

நாலு மாதம், ஆறு மாதங்களுக்கொரு முறை பார்க்க வரும் தந்தையோடு தனியாகப் பேச, இடமும் சமயமும் தேட முடியுமா? அப்படியே அவசரமாக இரண்டு வார்த்தைகளுக்கு இடம் கிடைத்தாலும் தந்தையிடம் ஆதரவு கிடைக்குமா?

“எது எப்படியிருந்தாலும் அம்மா, இனி இதுதான் உன் இடம். பிறந்த வீட்டு மண்டை தரையில் உருளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. எல்லாம் போகப் போகச் சரியாப் போயிடும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/139&oldid=1533990" இலிருந்து மீள்விக்கப்பட்டது