பக்கம்:பாற்கடல்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

லா. ச. ராமாமிருதம்


எழுத்துக்கு எந்தெந்தப் பத்திரிகைகள் இல்லை ? இதென்ன மூக்கு உறிஞ்சல், உணர்ச்சி நாடகம் ?”

இந்தக் கூற்றுக்கு என்னிடம் ஒரு பதில்தான் உண்டு.

எல்லாமே அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி.

இந்த விஞ்ஞான யுகத்திலும், பகுத்தறிவு சகாப்தத்திலும்கூட மணங்களை விரும்புபவர்கள், தேடுபவர்கள் இருக்கிறார்கள்.

தொண்டை மட்டும்தானே ருசி? மூக்குவரைதானே மணம் ?

இந்தக் கேள்விகள் இன்றா பிறந்தன? இன்னும் கேட்டுக்கொண்டுதாணிருக்கிறோம். உயிர் வாழ்ந்து கொண்டுதாணிருக்கிறோம். மணக்க, மணக்க.

பாசம், பாசத்தின் விளைவாக மதிப்பு சமுதாயத்தில் கமழும் மணம்தானே! உறவின் தாது இந்த மணம்.

இது ஒரு சிந்தனை ஓட்டம். அதில் அவ்வப்போது தோன்றுவன, தோன்றியவர், தோன்றுபவர் எழுத்தின் மூலம், என்னால் முடிந்தவரை, தோன்றியபடி, பாற்கடல் உத்தி, கடைந்துகொண்டேயிருப்போம். கிடைப்பது கிடைக்கட்டும் - கிடைக்கிற வேளையில். இது தவிர வேறேதும் அறியேன்.

நாற்பத்துஐந்து வருடங்களாகக் கடைந்துகொண்டிருக்கிறேன். யார் கண்டது? என் கயிற்றிலேயே கால் தடுக்கிக் கடலில் மூழ்கினாலும் போச்சு.

ஆனால் தம்பி கேட்டது என்னவோ உண்மைதான்.

எழுத்தின் முகம் இப்போ எவ்வளவோ மாறிவிட்டது. தொழிற்சாலை ரீதியில் நடக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/14&oldid=1532902" இலிருந்து மீள்விக்கப்பட்டது