பக்கம்:பாற்கடல்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

135


உன்னிடமே இருப்பதை

எங்கே தேடிக்கொண்டிருக்கிறாய்?

இன்னும் ஏதோ தொடுவானத்துக்கு விரிவு கொடுத்துக் கொண்டே போகும் mystic வார்த்தைகள்.

போகப் போகச் சரியாப் போயிடும்.

ஆம், எது சரியாகப் போகவில்லை?

மன்னிக்கு - அப்போது அவள் இன்னும் மன்னி அல்ல. சீதாலக்ஷ்மிக்கு - அவள் சீதாலக்ஷ்மியும் அல்ல. சரி, குட்டிக்கு, இந்த வீட்டுப் பட்டினிகள் பழகிவிடவில்லையா? அரைத்தவளுக்கு ஆட்டுக்கல், சமைத்தவளுக்குச் சட்டி - இதுதான் குடும்பம். குடும்பம் ஒரு பாற்கடல்.

மனத்துடன் பசிவயிறு சமாதானமாகி விடவில்லை. சமாதானம் என்றால், விலக்க முடியாததை அநுபவித்தேயாக வேண்டும் என்கிற நிலை.

வாழ்க்கையில் வயிறு ஒர் அத்தியாயம், வயிறு மட்டும் வாழ்க்கை அல்ல.

அக்கிரமங்களுக்கு அத்தியாயம் ஒண்ணா ரெண்டா? கண்ணைத் திறந்துகொண்டே அவற்றில் வாழ்ந்துகொண்டு மிஞ்சவில்லையா? மன்னி அப்படி வாழ்ந்து மிஞ்சா விட்டால் நான் ஏது? அவள் வழிப் பேரன் அவனும் இதோ தன் ஓடத்துக்குக் காத்திருக்கிறான்.

Life marches on.

குழந்தை குமரியாகி, தன் மலர்ச்சியின் புது விழிப்பில், தன் மன்னவனைக் காண்கையில் உள்ளூர உவகை பொங்கியிருக்க மாட்டாளா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/141&oldid=1534008" இலிருந்து மீள்விக்கப்பட்டது