பக்கம்:பாற்கடல்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

138


அரிசி, பருப்பு, உளுந்து, மிளகுப்பொடி, மூட்டைமேல் நடுவழியில் தெரிந்தவர் கொடுத்த வாழைக்காய், கீரைத்தண்டு, குடும்பம் இரண்டுவேளை பசியாமல் சாப்பிடும் வலுவில்தான் மூட்டை இருக்கும்.

மன்னிக்கு அப்பா இருந்தவரை இந்தச் சீர் நடந்து கொண்டிருந்தது. அண்ணனுக்கும் தங்கைக்கும் என்றைக்குமே ஒற்றுமை இருந்ததில்லை.

“என்னடா நீ குடுமியோடு பிறந்தால், நான் கொண்டையோடு பிறந்தேன். உனக்கு இருக்கும் உரிமை எனக்கும் உண்டு!” என்று மன்னி சண்டை போடுவாளாம். இது என் தகப்பனாரின் அலாதிக் கிண்டல் கதையா? உண்மையிலேயே அப்படித்தானா? மன்னிக்குத்தான் வெளிச்சம். தகப்பனார் காலமாகிவிட்ட பின் சுப்பராமன் உள்ளே நுழையக்கூட விடவில்லை. அப்புறம் மன்னிக்குப் பிறந்த வீட்டுப் பிரமேயமே அற்றுப்போயிற்று.

அண்ணனும் பிறகு விளங்கவில்லை. ஏனோ போண்டியாகிவிட்டான். அதோடு அந்த அத்தியாயம் சரி.

நான் அறிந்த மன்னிப் பாட்டிக்குப் பற்கள் ஒன்றிரண்டு தவிர, மற்றவை விழுந்து விட்டன. சிரித்தால் முகம் ரப்பர் பொம்மை மாதிரி சுருங்கும். அழுகிறாளா? சிரிக்கிறாளா? உண்மையிலேயே சந்தேகம் தோன்றும். ஏன் அழப்போகிறாள்? ஆனால், “மன்னி மன்னி, அழாதேயுங்கோ” என்று பேரக்குழந்தைகள் கேலி பண்ணப் பண்ண, முகம் இன்னும் சவுங்கும். அதுவே எங்களுக்கு ஒரு பெரிய தமாஷ். அந்த முகம் எங்களுக்கு அலுக்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/145&oldid=1534012" இலிருந்து மீள்விக்கப்பட்டது