பக்கம்:பாற்கடல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

லா. ச. ராமாமிருதம்


மன்னி சமையல் நளபாகம் தோற்றது. நாளுக்கு நாள் தேவாமிர்தம்; ஒரு உப்பு கூட மினுக்கும். ஆனால் அதுவே தனி ருசி.

“சப்தரிஷி சரிஞ்சு போயிட்டான். அவனோடு நான் இருந்தால் அவனுக்குச் சிரமந்தானே?” என்று சொல்லமாட்டாள். ஆனால் அதுதான் அவள் எண்ணம். ஆகையால் அவள் நாட்கள் பெரும்பாலும் இரண்டாம் பிள்ளையிடமே கழிந்தன. தவிர, சித்தி நோஞ்சான். சப்தரிஷி பிள்ளைகள் இங்கேதான் படிக்கின்றன. அமிர்தகடேசனுக்கு மூன்று பெண்கள். சம்சாரமும் வேலையும் இங்கேதான். கூட நம்மால் முடிந்தவரை பார்வதிக்கு ஒத்தாசையாக இங்கே இருப்போம்!”

மனம் அங்கே, இடம் இங்கே.

நோஞ்சான் சித்தி நாளடைவில் நோயாளி ஆகிவிட்டாள். வலது முழங்காலில் முட்டியில் வீக்கம் கண்டு எந்தச் சிகிச்சைக்கும் மசியவில்லை. அப்புறம் ஒருநாள் வாய் வைத்துக்கொண்டு, முளை கண்டு, புரையோடிப் படுத்த படுக்கையாகிவிட்டாள். அதற்குக் கான்சர் எனும் பெயர் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. அல்லது டாக்டர்களிடம் பெயர் 'குட்டா'க இருந்ததோ என்னவோ? நோய்க்குப் பேரே தெரியாத போது, மருந்து ஏது? டாக்டர் இருட்டில் குருட்டாண்டி.

அப்போது நாங்கள் திருவட்டீஸ்வரன் பேட்டை கோயில் குளத்துக்கெதிர் நாகப்பையர் சந்தில் குடியிருந்தோம். கீழே மூன்று குடித்தனங்கள். மாடியில் ஒன்று. இன்னும் மின்சாரமும் டிரெயினேஜும் வராத நாட்கள். இந்த வீடு என் வாழ்க்கையில் பல சம்பவங்களுக்கு அரங்க மேடை. இதில் மன்னி நிலை என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/146&oldid=1534013" இலிருந்து மீள்விக்கப்பட்டது