பக்கம்:பாற்கடல்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

141


தேறாத நோயில் படுக்கையாகி, நாட்டுப்பெண், மாமியார் ஆகிவிட்டாள். அவளுக்குப் பணிவிடையில் மாமியார் மருமகளாகிவிட்டாள். வாழ்க்கையின் கேலி எப்படி? விதியின் மோனச் சிரிப்பு எப்பவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது நம் செவிக்கு. ஒட்டுக் கேட்டால் கேட்கும்.

விதவைக் கோலத்தில், வயது எழுபதை நெருங்கிக் கொண்டு, என் முழு பிரக்ஞையில் அழுத்தக் கோடாக விழுந்த மன்னி இவள்தான்.

சித்தப்பா குழந்தைகளுக்கு இரண்டுங்கெட்டான் வயதுகள், பத்து, ஏழு, நாலு இதுபோல். நானும் என் தம்பியும் வேறு. சித்தப்பா கடும் ஆஸ்துமாக்காரர். இழுக்க ஆரம்பித்துவிட்டால் எண்ணெய் காணா கில், கீச் கீச் பயமாய்க்கூட இருக்கும். விலாவில் இழுத்து இழுத்து, மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு, கை மார்மேல் முஷ்டியாகி நடப்பார். அவருக்கு அதிலேயே உடல் கூனிவிட்டது. அதற்குரிய மருந்துப் பொடியைப் புகை பிடித்துக் கபம் கழன்று மூச்சு கொஞ்சம் சுவாதீனப்படுவதற்குள் அவர் படும் வேதனை பெரிதா ? பார்ப்பவர் வேதனை பெரிதா? தாய் படும் வேதனை பெரிதா ? நள்ளிரவில் தாக்குதல் வந்துவிட்டால், பயங்கரம் கேட்க வேண்டாம். பனிக்காலத்தில் நாள் கணக்கில் சித்தப்பா குளியலுக்கு முழுக்குத்தான்.

ஆகவே மன்னி பாடு என்ன என்று அறிவதற்கு இவ்வளவு விபரம்.

மருமகளின் காலைக்கடன்கள் - எடுப்பு, குளிப்பாட்டு, படுக்கை மாற்றல், உணவு, மருந்து கவனித்தல் — மருமகளுக்குச் செவிலித்தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/147&oldid=1534014" இலிருந்து மீள்விக்கப்பட்டது